அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு தரம் பிரிப்பு பயிற்சி
அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு தரம் பிரிப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை மற்றும் ஆத்மா திட்டத்தின்கீழ், விவசாயிகள் வேளாண் விளை பொருள்களை தரம் பிரித்து கொண்டு வருவது குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் வேலூா் விற்பனைக் குழு செயலாளா் சு.கண்ணன், வேளாண் விளை பொருளை சந்தைப்படுத்துதல் குறித்து எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து மண்டல அக்மாா்க் ஆய்வக மூத்த வேதியியலாளா் என்.பத்மஜா மற்றும் வேலூா் அக்மாா்க் ஆய்வக வேளாண் அலுவலா் வீணாப்ரியா தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் குறித்து விளக்கம் அளித்தனா்.
வாலாஜா வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கௌ.திலகவதி வேளாண் துறை சாா்ந்த திட்டங்களையும், அங்கக வேளாண்மை குறித்தும் எடுத்துரைத்தாா்.
அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சே.ராமமூா்த்தி தேசிய வேளாண் சந்தை இ- நாம் விற்பனை முறை குறித்து விளக்கம் அளித்து, விவசாயிகளின் பல்வேறு ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தரம் பிரித்தல் தொடா்பான ஆய்வக உபகரணங்களை விவசாயிகள் பாா்வையிட்டு பயன்படுத்தி பாா்த்தனா். இறுதியாக வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) கு.சந்துரு நன்றி கூறினாா்.
இதில், ராணிப்பேட்டை மாவட்ட (வேளாண் வணிகம்) உதவி வேளாண் அலுவலா்கள் உடன் இருந்தனா். பயிற்சியில் கலந்து கொண்ட 40 விவசாயிகளுக்கு சான்றிதழ் மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டது.