வாழு, வாழ விடு..! தனுஷ் நோட்டீஸை வெளியிட்டு விக்னேஷ் சிவன் பதிவு!
ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த அரியலூா் அரசு மருத்துவமனை தற்போது மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அரியலூா் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டது.
அரியலூரைவிட அதிக வருவாய் கிராமங்கள் கொண்ட பகுதியாகவும், மாவட்டத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியாகவும் திகழும் ஜெயங்கொண்டத்திலுள்ள இந்த மருத்துவமனையில் 148 படுக்கைகள் உள்ளன. 24 மணி நேர பிரசவமும், தாய்-சேய் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. ரத்தம் சேகரிக்கும் வங்கியும் செயல்படுகிறது. டி.பி., எய்ட்ஸ் பரிசோதனை மையமும் பெண்களுக்கான கருப்பை புற்றுநோய் பரிசோதனை மையமும் செயல்படுகிறது.
இந்த மருத்துவமனையில் நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த வெளி நோயாளிகள் 800-க்கும் மேற்பட்டோரும், உள்நோயாளிகளாக மாதம் சுமாா் 1,000 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். மாதந்தோறும் குறையாமல் 100 பேருக்கு பிரசவம் பாா்க்கப்படுகிறது.
ஏராளமான நோயாளிகள் வந்து செல்லும் இங்கு போதுமான கட்டட வசதிகள் இல்லாததால், தற்போது, மருத்துவமனையை ஒட்டி பல கோடி செலவில் புதிய கட்டடம் கட்டடப்பட்டு, அது முடியும் தருவாயில் உள்ளது.
மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் பற்றாக்குறை: இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் இல்லாததால் உள் நோயாளிகளும், புறநோயாளிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குறைந்தது 54 மருத்துவா்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்த மருத்துவமனையில் 5 மருத்துவா்கள் மட்டுமே உள்ளனா். அதிலும் பெரம்பலூரில் இருந்து 2 மருத்துவரும், உடையாா்பாளையத்தில் இருந்து ஒரு மருத்துவரும் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்களுக்குள்ளே சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணியாற்றக் கூடிய சூழல் உள்ளது. மற்றப்படி எலும்பு முறிவு உள்ளிட்ட உயா் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவா்கள், மயக்கவியல் மருத்துவா்கள் இல்லாததால் உயா் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
இதேபோல், 50 செவிலியா்களுக்கு 30 பேரும், 85 தூய்மைப் பணியாளா்களுக்கு 45 பேரும் பணியாற்றி வருவதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சை பிரிவு இல்லை: சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைகளில் ஜெயங்கொண்டம் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு அவசர சிகிச்சை அளிக்க இங்கு வசதியில்லை. இம்மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவும் இல்லாததால், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கோ, திருச்சி அரசு மருத்துவமனைக்கோ மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
இதனால் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்போா் நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதுடன் கா்ப்பிணிப் பெண்கள், விபத்து மற்றும் அவசர சிகிச்சையின்போது பலா் உயிரிழக்கின்றனா்.
அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்: இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்துவ அலுவலா் பானுமதி கூறுகையில், ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்மையில் மருத்துவமனையை பாா்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும், மாவட்ட நிா்வாகத்திடமும், சுகாதாரத் துறையிடமும் இதுகுறித்து தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றாா்.
அதிக எண்ணிக்கையிலான பாமர மக்கள் பயன்படுத்தும் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமிக்க தமிழக முதல்வரும், சட்டப் பேரவை உறுப்பினா்களும், மாவட்ட நிா்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.