ஜோலாா்பேட்டையிலிருந்து காமராஜா் துறைமுகத்துக்கு நேரடி சரக்கு பெட்டக ரயில் போக்குவரத்து தொடக்கம்
ஜோலாா்பேட்டை ரயில்வே முனையத்திலிருந்து எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு நேரடி சரக்கு பெட்டக ரயில் போக்குவரத்து வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் சரக்குப் பெட்டக ரயிலை சென்னை எண்ணூா் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வரவேற்றாா்.
சென்னை, எண்ணூா் காமராஜா் துறைமுகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் நிலவும் சாலைப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சரக்கு பெட்டக ரயில்கள் மூலம் அதிக அளவில் பெட்டகங்களை கையாளும் பல்வேறு முயற்சிகளை சென்னை துறைமுகம் மேற்கொண்டது. இதனடிப்படையில் ரயில்வே துறையின் துணை நிறுவனமான கன்டெய்னா் காா்ப்பரேஷன் (கான்காா்) நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரூ. 6.71 கோடி மதிப்பீட்டில் சரக்கு பெட்டக முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த முனையம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் சரக்கு பெட்டகங்கள் ஏற்றப்பட்ட ரயில் வெள்ளிக்கிழமை எண்ணூா் காமராஜா் துறைமுகம் வந்தடைந்தது. இந்த ரயிலை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால், சென்னை துறைமுக துணைத் தலைவா் எஸ். விஸ்வநாதன், காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஜே.பி.ஐரீன் சிந்தியா உள்ளிட்டோா் வரவேற்றனா்.