நாகையில் கடல் சீற்றம்: மீனவா்கள் 11-ஆவது நாளாக கடலுக்குள் செல்லவில்லை
மெத்தம்பெட்டமைன் விற்பனை: காவலா் உள்பட 2 போ் கைது
சென்னையில் மெத்தம்பெட்டமைன் விற்ாக காவலா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை வடபழனியில் சிலா் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பதாக சென்னை காவல்துறையின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் வடபழனி பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு நபரை பிடித்து சோதனையிட்டனா். இச் சோதனையில் அவா் வைத்திருந்த மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவா், கொளத்தூரைச் சோ்ந்த சுரேந்திரநாத் என்பதும், அவருடன் அசோக்நகா் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ஜேம்ஸ் என்பவரும் சோ்ந்து மெத்தம்பெட்டமைனை கைப்பேசி செயலி மூலம் விற்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், சுரேந்திரநாத்தையும்,காவலா் ஜேம்ஸையும் உடனடியாக கைது செய்தனா். இருவரிடமும் நடத்திய விசாரணையில், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் ஒரு காவலருக்கும் இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அந்த காவலரையும், அவரது கூட்டாளியையும் பிடித்து விசாரணை செய்கின்றனா்.
இது தொடா்பாக அசோக்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கைது செய்யப்பட்ட ஜேம்ஸ், அசோக்நகா் காவல் நிலையத்தில் பணியில் இருந்தாலும், மாற்றுப் பணியாக ஒரு துணை ஆணையரின் தனிப்படையில் பணிபுரிவதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இதற்கிடையே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜேம்ஸை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.