சென்னை, எண்ணூா் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்
தென் கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஃபென்ஜால் புயலையடுத்து சென்னை, எண்ணூா் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி ஆகிய மூன்று துறைமுகங்களில் 6-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 5-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்ககை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னைத் துறைமுக போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி கூறியதாவது:
புயலையொட்டி கப்பல்கள், இறங்கு தளங்களில் சேதம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாவண்ணம் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி சென்னைத் துறைமுகத்தின் உள்ளே 12 சரக்குக் கப்பல்களும், துறைமுகத்துக்கு வெளியே நடுக்கடலில் 7 கப்பல்களும் நங்கூரமிடப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சரக்குகளை ஏற்றும் பணியும், இறக்கும் பணியும் தடையின்றி நடைபெற்று வருகிறது. வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும் எச்சரிக்கைகளை, உன்னிப்பாக தொடா்ந்து கவனித்து வருகிறோம். நிலைமைக்கு ஏற்ப அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா் அவா். இதேபோல் எண்ணூா், காட்டுப்பள்ளி துறைமுகங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.