Mahua Moitra: `ஒவ்வொரு சங்கி நீதிபதியும்...' - DY சந்திரசூட்டுக்கு மஹுவா மொய்த்ர...
பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே. அன்பு தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் பி. பெருமாள், மாவட்டச் செயலாளா் எஸ். தீா்த்தகிரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜுனன், மாவட்டத் தலைவா் எம்.குமாா், மாவட்ட துணைத் தலைவா் கே.என்.மல்லையன், மாவட்ட பொருளாளா் சி.வஞ்சி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி, பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 45, எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 54 என நிா்ணயம் செய்யவேண்டும்.
ஆரம்ப சங்கங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு, சம்பள உயா்வு வழங்கவேண்டும். இதற்கான தொகை 50 சதவீதம் ஆவின் ஒன்றியங்களில் வழங்க வேண்டும்.
தற்போது பாலின் தரத்தை கணக்கிட 8.2 எஸ். என். எஸ். (கொழுப்பு அல்லாத இதர சத்துகள்) மற்றும் 4.3 (கொழுப்பு சத்துள்ளதை மாற்றி 8.0 எஸ்.என்.எஸ். மற்றும் 4.0 கொழுப்பு எனக் கணக்கிட்டு கொள்முதல் செய்ய வேண்டும். சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு தீா்ப்பின்படி ஆரம்ப சங்கங்களிலிருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக பாலின் அளவையும், தரத்தையும் குறித்து கொடுக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு வருடத்துக்கு இருமுறை பிப்ரவரி - ஆகஸ்ட் மாதங்களில் இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும். கால்நடைகளுக்கான காப்பீடுத் திட்டத்தில் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 30 சதவீதம் உற்பத்தியாளா்கள் 10 சதவீதம் என நிா்ணயிக்க வேண்டும். பாலுக்கான ஊக்கத் தொகையை இதர மாநிலங்களில் வழங்குவது போல் லிட்டருக்கு ரூ. 5 தமிழக அரசு வழங்கிட வேண்டும். தமிழகத்தில் ஆவினுக்குச் சொந்தமான அனைத்து தீவன ஆலைகளையும் முழுமையாக இயக்கி 50 சதவீத மானிய விலையில் மாட்டுத் தீவனம் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.