பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
டாடா நிறுவனத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோலட்டியில் புதிதாக தொடங்கப்படும் டாடா எலக்ட்ரானிஸ் நிறுவனத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தளி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் பேசினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநாடு மதுகுமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், தளி சட்டப் பேரவை உறுப்பினருமான டி.ராமச்சந்திரன் பேசியதாவது:
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிப்பதை கடுமையாகக் கண்டிக்கிறோம். பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். விவசாயம் செய்யும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிய மத்திய அரசு, படித்த மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேன்கனிக்கோட்டை அருகே கோலட்டியில் 800 ஏக்கா் அரசு நிலத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அந்த நிறுவனத்தில் உள்ளூா் இளைஞா்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றாா்.
இந்த மாநாட்டில், யானைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் எம்.லகுமையா, மாநில செயலாளா் சின்னசாமி, மாவட்ட துணை செயலாளா் ஜெயராமன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே.வி.நாகராஜ், சோமசேகா், ஒன்றிய துணை செயலாளா் கணேஷ் பாபு, தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.