செய்திகள் :

டிரம்ப் திட்டம்; பாதி ஏற்ற ஹமாஸ்; தொடர்ந்து தாக்கும் இஸ்ரேல் - போர் முடிவதில் சிக்கல்? | Explained

post image

காஸாவில் என்று அமைதி திரும்பும் என உலகமே எதிர்பார்த்த அந்த நாள் இன்றாக இருக்கலாம்!

குண்டு சத்தத்துக்கும், அழுகுரலுக்கும் பதிலாக சுதந்திரப் பறவை சத்தம் கேட்கும் நாளாகவும், குழந்தைகள் உணவுக்காக தட்டேந்தி குண்டடிப்பட்டு சாவதற்கு பதிலாக, பட்டாம்பூச்சி பிடிக்க ஓடும் நாளாகவும், அச்சத்தில் தூங்கிய நாள்கள் கடந்து இனி நிசப்தமான இரவில் தூங்குவதற்கான நாளாகவும் இந்த நாள் அமையலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 20 அம்ச அமைதித் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக இஸ்ரேல் ஏற்கெனவே அறிவித்தது.

இஸ்ரேலும், ஹமாஸும் முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தாக்குதல் நிறுத்தப்படும், அமைதி திரும்பும் என்றும், ஹமாஸ் ஏற்காவிட்டால் இதுவரை இல்லாத மோசமான தாக்குதலை அந்த அமைப்பு சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

அக்டோபர் 5-ம் தேதி வரை இறுதி கால அவகாசமும் கொடுத்திருந்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இந்நிலையில், டிரம்ப்பின் அந்த அமைதித் திட்டத்தை ஏற்பதாக அறிவித்திருக்கிறது ஹமாஸ் அமைப்பு.

இதைத் தன்னுடைய Truth சமூக ஊடகத்தில் அறிவித்திருக்கிறார் டிரம்ப். ஹமாஸ் திட்டத்தை ஏற்றதால், உடனடியாக இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால், இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது.

ஹமாஸ் முழுமையாக 20 அம்ச திட்டத்தை ஏற்றுக் கொண்டதா? என்றால் இல்லை.

சில அம்சங்களில் ஹமாஸுக்கு முரண் இருக்கிறது. அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

அவை என்ன அம்சங்கள் என்று பார்ப்பதற்கு முன்பு, டிரம்ப் வெளியிட்ட அந்த 20 அம்சங்கள் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. காஸாவை ஆயுத படைகள் இல்லாத ஒரு பகுதியாக (demilitarized zone) மாற்றப்படும்.

2. சிதைந்திருக்கும் காஸா மீட்டுருவாக்கம் செய்யப்படும்.

3. இஸ்ரேல், ஹமாஸ் என இரு தரப்பும் ஒப்புக் கொண்டால், ஹமாஸ் வசம் இருக்கும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். விடுவிப்பு நடக்கும்போது, தாக்குதல் நிறுத்தப்படும். இஸ்ரேல், ஹமாஸ் படைகளின் நிலைகள் முன்னேறக் கூடாது.

ஹமாஸ்
ஹமாஸ்

4. அமைதித் திட்டத்தை ஏற்றுக் கொண்ட 72 மணி நேரத்தில் பணையக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

5. அனைத்து பணையக் கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, இஸ்ரேல் சிறையில் உள்ள 250 பாலஸ்தீன ஆயுள் கைதிகள், 1,700 காஸா கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஹமாஸ் வசம் இருக்கும் இறந்த பணையக் கைதிகள் உடல் ஒவ்வொன்றுக்கு, 15 காஸா கைதிகள் என்ற கணக்கில் விடுவிக்கப்படுவர்.

6. ஹமாஸ் ஆயுதத்தை கீழே போட வேண்டும். காஸாவில் இருக்க விரும்பும் ஹமாஸைச் சேர்ந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். காஸாவை விட்டு வெளியேற நினைக்கும் ஹமாஸுக்கும் அனுமதி அளிக்கப்படும்.

7. காஸாவுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவி, மீட்டுருவாக்கத்துக்கான உதவி முழு மூச்சில் அனுப்பப்படும்.

8. நிவாரண உதவிகள் ஐ.நா, செஞ்சிலுவை இயக்கம் மற்றும் இரு தரப்புக்கும் தொடர்பில்லாத பொது மனித உரிமை அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும்.

தற்போது இஸ்ரேல் தேர்தெடுத்த Gaza Humanitarian Foundation என்ற என்.ஜி.ஓ உதவிகளை விநியோகித்து வருகிறது. அவர்களிடம் உதவிகளைப் பெற வரும் மக்கள்தான் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

9. நிவாரண உதவிகளை எடுத்துவர ஏதுவாக, எகிப்து எல்லையான ராபா எல்லை திறக்கப்படும்.

10. காஸாவை பாலஸ்தீன மற்றும் சர்வதேச நிபுணர் குழு (Technocrats) நிர்வகிப்பார்கள்.

இவர்கள், ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

அரசியலற்ற குழுவாகவும் இது இருக்கும். இந்த குழுவின் செயல்பாடுகளை, அமைதிக்கான வாரியம் ( Borad of Peace) என்ற வாரியம் மேற்பார்வை செய்யும்.

உணவுக்காக காத்திருக்கும் காஸா குழந்தைகள்
உணவுக்காக காத்திருக்கும் காஸா குழந்தைகள்

அதன் தலைவராக டிரம்ப் இருப்பார். அதில், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேய்ர் மற்றும் அரபு, மேற்கத்திய நாடுகள் சிலவற்றின் தலைவர்களும் அங்கம் வகிப்பார்கள்.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேய்ர் - அமெரிக்கா, ரஷ்யா, ஐ.நா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரதிநிதியாக செயல்பட்டவர்.

அந்த வகையில் அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவர் இதில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

காசா மக்கள்
காசா மக்கள்

இருப்பினும் இவர் பிரதிநிதியாக செயல்பட்ட காலத்தில், அமைதிக்கான முன்னேற்பாடுகள் பெரிய பயன் தரவில்லை.

இவர் இஸ்ரேலுக்கு ஆதரவானவர் என்ற பிம்பமே இருக்கிறது. ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன மக்கள், டோனி பிளேய்ரின் வருகை சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர்.

11. காஸா மீட்டுருவாக்கம் பணிகளை செய்ய சர்வதேச அளவில், பல்வேறு நாடுகளில் உட்கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்திய நிபுணர்கள் மேற்கொள்வார்கள்.

ரியல் எஸ்டேட் அதிபரான டிரம்ப்பின் நிறுவனமேகூட, நாளை காஸாவின் உட்கட்டமைப்பு பிராஜெக்ட்டை எடுத்து செய்ய வாய்ப்புள்ளது.

12. காஸாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்

13. காஸா மக்களை வெளியேற்ற மாட்டோம். அவர்கள் வெளியே செல்ல விரும்பினால் உதவப்படும். திரும்பி வர விரும்பினாலும் அனுமதிக்கப்படுவர்.

14. ஹமாஸ் அமைப்பினர் அரசியல் மற்று அரசு நிர்வாகத்தில் பங்காற்றக் கூடாது.

அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் அழிக்கப்படும் அல்லது சர்வதேச சந்தையில் முறைப்படி மறுவிற்பனை செய்யப்படும்.

பதுங்குவதற்காக ஹமாஸ் உருவாக்கி வைத்திருக்கும் சுரங்கப்பாதைகள் அழிக்கப்படும்.

15. ஹமாஸ் விதிகளை முறையாக பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்து அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியது அரபு நாடுகள்.

israel palestine war getting intense again people suffering
இஸ்ரேல், காஸா போர்

16. சர்வதேச சமநிலைப் படை ( International Stabilization Force -ISF) என்ற படை காஸாவின் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளும்.

எல்லை பாதுகாப்பு இந்த படையின் கையில்தான் இருக்கும். பல்வேறு நாடுகளின் படைகள் இதில் பங்கேற்கும்.

17. காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்காது. இஸ்ரேல் ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற கால நிர்ணயம் செய்யப்படும். பாதுகாப்பு பணி ஐ.எஸ்.எப் படையிடம் ஒப்படைக்கப்படும்.

18. இந்த அமைதித் திட்டத்துக்கும் ஹமாஸ் ஒப்புக் கொள்ளாவிட்டால், ஹமாஸ் பிடியில் இல்லாத பகுதிகளில், ஐ.எஸ்.எப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளத் தொடங்கும்.

19. பாலஸ்தீன, இஸ்ரேல் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் வெறுப்பு எண்ணங்களை நீக்க உதவும் வகையில், இரு தரப்பினரும் பங்கேற்கும் குழு ஒன்று அமைத்து நல்லுறவுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

20. இந்த விதிகள் எல்லாம் சரியாக பின்பற்றப்பட்டால் மட்டுமே, பாலஸ்தீனத்துக்கான அரசை அங்கீகரிக்க முடியும். அரசியல் ரீதியாக பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே உறவை சுமுகமாக்கவும் மத்தியஸ்தம் செய்யப்படும்.

இவையே டிரம்ப் சொன்ன அந்த அமைதித் திட்டம்.

நெதன்யாகு - ஹமாஸ்
நெதன்யாகு - ஹமாஸ்

ஹமாஸ் ஏற்றுக் கொண்ட திட்டங்கள் எவை?

1. காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்காது.

2. காஸா மக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.

3. பணையக் கைதிகள் விடுவிப்பு.

4. காஸா கைதிகள் விடுவிப்பு.

5. இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தம்.

6. காஸாவுக்குள் நிவாரண உதவிகள் அனுமதிப்பது.

ஆகிய அம்சங்களை ஹமாஸ் வரவேற்றிருக்கிறது.

பாலஸ்தீனம்
பாலஸ்தீனம்

காஸாவின் நிர்வாகத்தை பாலஸ்தீன நிபுணர் குழு மற்றும் சர்வதேச நிபுணர் குழு இணைந்து மேற்கொள்ளும் என்பதை ஒரு பகுதி ஏற்கிறார்கள்.

அதாவது, அந்த குழுக்கள் நிர்வகிக்க வேண்டும் என்றால், அதற்கு பாலஸ்தீனயர்களிடம் (குறிப்பாக காஸா மக்களிடம்) கணிசமான ஆதரவு கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறது ஹமாஸ்.

சரி, ஹமாஸ் முழுமையாக ஏற்காத நிபந்தனைகள் எவை?

1. டிரம்ப் தலைமையிலான அமைதிக்கான வாரியம்.

2. ஹமாஸ் ஆயுதங்களை கீழே போடுவதைப் பற்றி, ஒப்புதலை ஹமாஸ் தெரிவிக்கவில்லை.

3. பாலஸ்தீனத்தின் நிர்வாகத்தில் ( காஸாவை உள்ளடக்கிய) ஹமாஸுக்கு என்ன பங்கு இருக்கிறது, என்பதில் தெளிவை கேட்கிறது ஹமாஸ்.

4. காஸாவில் செய்யவிருக்கும் பொருளாதாரத் திட்டங்கள் குறித்தும் எந்த தெளிவான விருப்பத்தையும் ஹமாஸ் தெரிவிக்கவில்லை.

5. பாலஸ்தீனத்தை ஒரு நாடாக, அரசாக அங்கீகரிப்பதிலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று ஹமாஸ் நினைக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம்
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம்

ஒட்டுமொத்தமாக பார்த்தால், பாலஸ்தீன மண் மீது காஸா மக்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. அதை அவர்களே நிர்வாகிப்பார்கள். வெளிநாடுகளின் தலையீடு தேவையில்லை என்ற இடத்தில் வந்து நிற்கிறது ஹமாஸ்.

மேற்கண்ட இந்த விவகாரங்களில், பேச்சுவார்த்தை தேவை என்றும் ஹமாஸ் நினைக்கிறது.

அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே, முழுமையான அமைதி திரும்பும் என உறுதியாகக் கூற முடியும்.

சரி, இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என டிரம்ப் தெரிவித்தாரே. இஸ்ரேல் நிறுத்தியதா? இல்லை.

இன்னும் காஸாவில் தாக்குதல் தொடர்கிறது. முந்தைய நாள்களைவிட தாக்குதல் குறைந்திருக்கிறது என்று சொன்னால் கூட, காஸாவின் வடக்கு பகுதி இன்னும் மோதலுக்கான பகுதிதான் என இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

`எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' - என்ன சொல்கிறார் சீமான்?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் மீன்பிடிக்கும... மேலும் பார்க்க

கோவை: காயத்துடன் 3 நாள்களாக ஆற்றில் நிற்கும் யானை - சிகிச்சை அளிக்க வனத்துறை தீவிரம்

கோவை மாவட்டம், ஆனைகட்டி பகுதியில், உடலில் காயங்களுடன் ஒரு மக்னா யானை கடந்த ஒரு வாரமாக சுற்றி கொண்டிருக்கிறது. அந்த யானை கேரளா வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தமிழக வனப்பகுதியான கூடப்பட்டி என்கிற கிராம... மேலும் பார்க்க

மதுரை: குண்டும் குழியும் நிறைந்த காளவாசல்-மேலக்கல் சாலை; சாகச பயணம் செய்யும் மக்கள் | Photo Album

மதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் சாலைமதுரை: காளவாசல்-மேலக்கல் ச... மேலும் பார்க்க

``இது போன்ற புத்தி செந்தில் பாலாஜிக்கு இருக்காது; பழனிசாமி தலைகீழாக நின்றாலும்" - டிடிவி தினகரன்

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, "கரூர் விவகாரத்தில் தன் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும், கூட்டணி கட்சிகள் விஜயை கைது செய்யக் கூறிய போதும்... மேலும் பார்க்க