உரிய அளவில் பொருள்களை வழங்காமை: ரூ. 21 ஆயிரம் வழங்க அமேசான் நிறுவனத்துக்கு குறைத...
''தங்கக்காசு அபிஷேகம்; கட்டிப்பிடிச்சு நடிக்கிறதுல விருப்பமில்ல'' - நல்லெண்ணெய் சித்ரா பர்சனல்ஸ்!
தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை நல்லெண்ணெய் சித்ரா.
''எனக்கு கை வலிக்குது; புடவை கட்டிக்க கஷ்டமா இருக்குன்னு சொன்னேன். என் பொண்ணு ஸ்ருதிதான் புடவை கட்டி விட்டா. கொஞ்சம் மேக்கப் போட்டுக்கோம்மான்னு அவதான் மேக்கப்பும் போட்டு விட்டா. இப்போ அவ தான் எனக்கு அம்மா மாதிரி இருக்கா''ன்னு, சில வருடங்களுக்கு முன்னாடி தன்னோட பேட்டி ஒண்ணுல நல்லெண்ணெய் சித்ரா சொல்லியிருப்பாங்க. ஆனா, கருணையே இல்லாத விதி, அந்தப் பேட்டி வந்த ஒரு வருஷத்துக்குள்ல சித்ராவோட உயிரை 'ஹார்ட் அட்டாக்'ங்கிற பேர்ல பறிச்சிடுச்சு. ரொம்ப இளகின மனசு சித்ராவுக்கு. தன்னை பேட்டி எடுக்கிற ரிப்போர்ட்டர்ஸ் கிட்ட கூட, 'படிக்க வசதியில்லாத பிள்ளைங்க யாராவது இருந்தா சொல்லுங்க. கடவுள் புண்ணியத்துல அடுத்தவங்களுக்கு உதவி செய்யுற அளவுக்கு என் நிலைமை இருக்கு'ன்னு சொல்வாங்களாம். ஆனா, அந்த இளகிய மனசுக்கு ஆயுள் வெறும் 56 வருஷம் தான், அப்படிங்கிறதை அவங்களோட குடும்பத்தாலயும் தாங்கிக்க முடியல, அவங்களோட ரசிகர்களாலயும் தாங்கிக்க முடியல.
சினிமா, சீரியல், விளம்பர மாடல்னு ஒரு பெரிய ரவுண்ட் வந்த 'நல்லெண்ணெய் சித்ரா'வுக்கும் சினிமாவுக்கும் ஏதாவது தொடர்பிருக்கா? அவங்க குடும்பத்துல யாராவது சினிமாவுல நடிச்சிருக்காங்களான்னு கேட்டா, சினிமாவுக்கும் சித்ராவுக்கும் துளிகூட சம்பந்தமே இல்லைங்கிறதுதான் உண்மையோ உண்மை. 'நான் நடிக்க வந்தது விபத்து'ன்னு சில நடிகைகள் சொல்வாங்க இல்லியா... அது நூறு சதவிகிதம் சித்ராவுக்குத்தான் பொருந்தும். 1965-ல கொச்சியில ஒரு ரயில்வே எம்பிளாயி வீட்ல ரெண்டாவது பெண் குழந்தையா பிறக்கிறாங்க. அப்பாவோட வேலை காரணமா சென்னைக்கு சித்ராவோட குடும்பம் ஷிஃப்ட் ஆகுது.
''அப்போ எனக்கு 10 வயசுக்குள்ள தான் இருக்கும். என் அத்தை வீடு வடபழனில இருந்துச்சு. சம்மர் ஹாலிடேஸ்ல அத்தை வீட்டுக்குப் போயிடுவேன். அப்படிப்போறப்போ எல்லாம் குடும்பமா ஏவி.எம்-ல நடக்கிற ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கப் போயிடுவோம். ஒருமுறை நானும் அப்பாவும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போயிட்டுத் திரும்பிட்டிருந்தோம். வழியில 'நாரத கான சபா'வுல 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங்.
நானும் அப்பாவும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பிச்சிட்டோம். அப்போ, கூட்ட நெரிசல்ல தடுமாறி கேமராவுக்கு முன்னாடி போய் விழுந்துட்டேன். உடனே, 'கட்... கட்'னு சத்தம். ஓடிவந்து சிலர் என்னைத் தூக்கி விட்டாங்க. திரும்பிப் பார்த்தா, அப்பாவை காணோம். பயத்துல அழ ஆரம்பிச்சிட்டேன். அதுக்குள்ள அப்பா வந்து ஸாரி கேட்டுட்டு, என்னைக் கூட்டிட்டுக் கிளம்பிட்டார். கொஞ்ச தூரம் போயிருப்போம். ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து ஒருத்தர் ஓடி வர்றார். 'டைரக்டர் சார் உங்களைக் கூப்பிடுறார்'னு சொல்றார். பயந்தபடியே கே.பி. பக்கத்துல போனேன், 'கேமரா முன்னாடி விழுந்துட்டே இல்ல; அப்போ எனக்கு ஒரு சீன் நடிச்சிக் கொடுத்துட்டுப் போ'ன்னு சொன்னார். என்னோட அப்பா சரின்னு சொல்ல, நானும் நடிச்சேன். அது எந்த சீன் தெரியுமா? அபூர்வ ராகங்கள் படத்தோட கிளைமேக்ஸ் பாட்டுல, ஒரு சிறுமி கிட்ட ரஜினி லெட்டர் கொடுத்து அனுப்புவார் இல்லியா? அந்த சிறுமி நான்தான். ரஜினி சார் கொடுத்த லெட்டரை, மேடையில 'கேள்வியின் நாயகனே'ன்னு பாடிக்கிட்டிருக்கிற ஶ்ரீவித்யா கிட்ட நான் கொடுக்கணும். சொல்லிக்கொடுத்த மாதிரி நடிச்சுக்கொடுத்துட்டு சந்தோஷமா வீட்டுக்கு வந்துட்டேன். அந்த ஒரு சீனை பார்க்கிறதுக்காக, எங்கம்மா அந்தப்படத்தை எத்தனை தடவை பார்த்திருக்காங்க தெரியுமா''ன்னு அவரே பேட்டி ஒண்ணுல மகிழ்ச்சியா ஷேர் பண்ணியிருக்கார்.
அடுத்தப்படம் 'அவள் அப்படித்தான்.' இந்தப்படத்துல இளவயது ஶ்ரீபிரியாவாக நடிச்சிருப்பார் சித்ரா. 'மூன்று முடிச்சு'ல ரஜினிக்கு தங்கையா, ஶ்ரீதேவிக்கு மகளா, கால் சரியில்லாத சிறுமியா நடிச்சிருப்பார். 'ராஜபார்வை' படத்துல கமலை கல்யாணம் செஞ்சுக்க விரும்புற பார்வை சவால் இருக்கிற 17 வயசுப்பொண்ணா நடிச்சிருப்பார். இதுக்கப்புறம் மலையாளப்படங்கள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கார் சித்ரா. மோகன்லால், மம்முட்டி, பிரேம் நசீர்னு பெரிய ஹீரோக்களோட நாயகியா நடிச்சிட்டிருந்தவர், ஒருநாள் கே. பாலசந்தரைப் பார்க்கப் போயிருக்கிறார். அது, சுஹாசினி நடித்த 'மனதில் உறுதி வேண்டும்' படத்தை கே.பி. டைரக்ட் செஞ்சுக்கிட்டிருந்த நேரம். சித்ராவுக்கு உடனே ஒரு ரோல் கொடுத்திருக்கார் கே.பி. சுஹாசினியோட கணவனுக்கு ரெண்டாவது மனைவியா அந்தப்படத்துல நடிச்சிருப்பார் சித்ரா. ஒரு பெட்ரோல் பங்க்ல வெச்சு சுஹாசினி, சித்ராவுக்கு மாங்கா ஊறுகாய் பாட்டில் கொடுத்திட்டுப் போவார். ரொம்ப சின்ன ரோல்னாலும் எல்லாரோட மனசுலயும் அழுத்தமா பதியுற கேரக்டர் அது. இதுபற்றி பின்னாள்ல ஒரு பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில, 'அந்த நேரத்துல கே.பி.சாரைப் பார்க்கப்போனது என்னோட அதிர்ஷ்டம்'னு சொல்லியிருக்கார் சித்ரா.
'மனதில் உறுதி வேண்டும்' வெளிவந்த அதே 1987-லேயே 'ஊர்க்காவலன்' படத்தில் ரஜினியின் தம்பி மனைவியா நடிச்சிருந்தார் சித்ரா. அந்தப்படத்தோட கதையே சித்ராவைச்சுற்றித்தான் இருக்கும். அடுத்ததா, 'என் தங்கச்சி படிச்சவ' படத்துல பிரபுவுக்கு தங்கச்சியா நடிச்சிருப்பார். இந்தப்படத்துலயும் சித்ராவோட கேரக்டரைச் சுற்றித்தான் கதை நகரும். அதன்பிறகு முரளியோட நினைவுச் சின்னம், கார்த்திக்கோட எதிர்காற்று, திருப்புமுனைன்னு ஹீரோயின் ரோல் செஞ்சுக்கிட்டிருந்தவர், 1991-ல 'சேரன் பாண்டியன்'ல யாரும் எதிர்பாராதவிதமா சரத்குமாரோட தங்கையா நடிச்சிருந்தார் சித்ரா. அண்ணன், தங்கை பாசத்தை சொல்ற படங்கள்ல சேரன் பாண்டியனை தவிர்க்கவே முடியாது. குழந்தைத்தனம், கல்யாணாமாகாத ஏக்கம், உயிரைக்கொடுத்து அண்ணன்களை சேர்த்து வைக்கிறதுன்னு சித்ராவோட கேரக்டர்தான் மொத்த படத்தையும் தாங்கிப் பிடிச்சிருக்கும்.
'பத்தினிப்பெண்' படத்துல நாயகியோட தோழி கேரக்டர். கிட்டத்தட்ட படம் முழுக்க அந்த கேரக்டர் நாயகியோட டிராவலாகுற அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கும். 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' படத்துல குடும்பத்தைக் கெடுக்கிற அக்கா ரோல். இந்த கேரக்டரும் படம் முழுக்கவே வரும். பாண்டியராஜனோட 'கோபாலா கோபாலா' படத்துல காமெடி கலந்த கேரக்டர் ரோல். இதுலேயும் பட்டைய கெளப்பியிருப்பார் சித்ரா. சித்ரா கடைசியா நடிச்ச திரைப்படம் 2020-ல வெளிவந்த 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா'. கிட்டத்தட்ட இருபது வருஷம் கழித்து இந்தப்படத்துல சித்ரா நடிச்சிருந்தார். இந்தப் படத்துல அவங்க ஹீரோவுக்கு அம்மாவா நடிச்சிருப்பாங்க.
தன்னோட மாடலிங் கரியர் பற்றி, தமிழ் சினிமாவோட உச்சத்துல இருந்த நேரத்துல ஒரு ஜாலியான இன்டர்வியூ கொடுத்திருந்தார் சித்ரா. ''நகைக்கடைக்கு மாடலா நடிச்சப்போ ஒருமுறை தங்கக்காசுகளால எனக்கு அபிஷேகம் செஞ்சாங்க. நடிப்புன்னாலும் அதுவொரு கூஸ் பம்ப்ஸ் மொமென்ட்டா தான் இருந்துச்சு எனக்கு. புடவைக்கடை விளம்பரங்கள்ல நடிக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். இருக்கிறதுலேயே அழகான புடவைகளைக் கட்டித்தான் மாடலிங் பண்ண வைப்பாங்க. ஷூட்டிங் முடிஞ்சதும் அந்தப் புடவைகளையெல்லாம் எனக்கே கொடுத்திடுவாங்க. ஆனா, என்னோட மாடலிங் கரியர்லேயே 'நல்லெண்ணெய் விளம்பரம்'தான் எனக்கு பெரிய ரீச்சைக் கொடுத்துச்சு. சித்ராவா இருந்த நான் 'இப்போ நல்லெண்ணெய் சித்ராவாகிட்டேன். இந்த அடையாளமும் நல்லாதான் இருக்கில்ல''னு சந்தோஷமா பேசியிருப்பார் சித்ரா.
மரணமடையுறதுக்கு சில வருடங்களுக்கு முன்னாடி கொடுத்த பேட்டி ஒண்ணுல, ''எந்த சினிமா பேக்கிரவுண்டும் இல்லாம தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தினு 300-க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கேன். தெலுங்கு, மலையாளத்துல ஹீரோயினா தான் நடிச்சேன். ஆனா, தமிழ்ல நிறைய கேரக்டர் ரோல்கள் தான் கிடைச்சிது. எனக்குக் கட்டிப்பிடிச்சு நடிக்கிறதுல விருப்பம் இல்லைங்கிறதால, இதுவும் நல்லதுக்கேன்னு நினைச்சிக்கிட்டேன்.
இதுக்கு நடுவுல அப்பா கைகாட்டினவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். அவர் ஒரு பிசினஸ்மேன். மகளும் பிறந்தா. அவளுக்கு ஒரு வயசு இருக்கிறப்போ ஒரு மலையாளப் பட வாய்ப்பு வந்துச்சு. கோழிக்கோடு போன மறுநாளே குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போக, பெரிய கும்பிடு போட்டுட்டுக் கிளம்பி வந்துட்டேன். நடிகை சரிதா, 'பிள்ளைங்களுக்குப் பத்து வயசு ஆகுறவரைக்குமாவது அவங்க பக்கத்துலயே இருக்கணும்'னு ஒரு தடவை அட்வைஸ் செஞ்சாங்க. எனக்கும் சரினு பட்டுச்சு. இதுக்கு நடுவுல அம்மா தவறிப்போனது, அப்பாவுக்கு ரொம்ப உடம்பு முடியாம போனது, கைக்குழந்தைன்னு ஆனதால, சினிமாவை விட்டுட்டு, கையளவு மனசு, ஆசைகள், மலர்கள், கணவருக்காக, இவளா என் மனைவின்னு சில சீரியல்கள்ல நடிச்சேன். கணவரோட பிசினஸையும் பார்த்துக்கிட்டேன். கூடவே, 'சித்ராஸ் கிச்சன்'னு ஒரு ஹோட்டல் நடத்திட்டிருந்தேன். மாஸ்டர் வரலைன்னா, நானே களத்துல இறங்கி சமைச்சிடுவேன். அந்தளவுக்கு ஹோட்டல் பிசினஸ்ல ஸ்ட்ராங்கா தான் இருந்தேன். ஆனா, பண மதிப்பிழப்பு வந்தப்போ, சமாளிக்க முடியாம ஹோட்டலை மூடிட்டேன். அம்மா, அப்பாவை கடைசி காலம் வரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டேன். மகளும் நல்லா வளர்ந்துட்டா. இதுக்கு மேல என்னங்க வேணும்''னு பேசியிருப்பார். சித்ரா நிறைவா வாழ்ந்துட்டுதான் போயிருக்காங்க அப்படிங்கிறதுக்கு அவங்களோட இந்தப்பேட்டியே சாட்சி. நீங்க நடிச்சப்படங்கள் வழியா எப்பவும் உங்க ரசிகர்களோட வாழ்ந்திட்டிருப்பீங்க 'நல்லெண்ணெய்' சித்ரா..!
- நாயகிகள் வருவார்கள்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...