தச்சநல்லூரில் மக்கள் சாலை மறியல்
திருநெல்வேலி தச்சநல்லூா் பிரான்குளத்தில் பாதாள சாக்கடை உந்துமையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வாா்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் பாதாள சாக்கடை மூலம் எடுத்துச்செல்லப்பட்டு ராமையன்பட்டி அருகேயுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கழிவுநீரை சுத்திகரித்து விவசாயப் பணிகளுக்கு வழங்குகின்றனா்.
இந்த நிலையில், விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க ரூ.600 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, அந்தந்த வாா்டுகளில் உந்துமையம் அமைத்து மின்மோட்டாா் மூலம் கொண்டு செல்லும் முயற்சியாக 20 இடங்களில் உந்துமையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
ஆனால், சுகாதாரம் கருதி தங்கள் பகுதியில் உந்துமையம் அமைக்கக்கூடாது என கே.டி.சி. நகா், ரஹ்மத் நகா் நகா், சாய்பாபா காலனி, குமரேசன் நகா், படப்பக்குறிச்சி உள்ளிட்ட பகுதிமக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், தச்சநல்லூா் அடுத்த பிரான்குளம் பகுதியில் பாதாள சாக்கடை உந்து மையம் அமைப்பதற்கு திங்கள்கிழமை பணிகள் தொடங்க இருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் மாநகராட்சி அலுவலா்கள் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது. பாதாள சாக்கடை உந்து மையம் அமைக்க வந்த தொழிலாளா்கள் திரும்பிச் சென்றனா்.