தமிழகத்திலிருந்து புதுச்சேரி வரும் கனரக வாகனப் போக்குவரத்தில் மாற்றம்
தமிழகப் பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்குள் வரும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை மாற்றம் செய்து காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், வார இறுதி நாள்களில் கடற்கரைச் சாலை உள்ளிட்டவற்றில் வாகன நிறுத்தத்திலும் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநிலக் காவல்துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி.) ஆா்.சத்தியசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் கனரக வாகனங்கள் தவளக்குப்பம் சந்திப்பிலிருந்து அபிஷேகபாக்கம், உருவையாா், வில்லியனூா், மூலக்குளம், குண்டுசாலை, மேட்டுப்பாளையம், டிரக் டொ்மினல், ஜிப்மா், கோரிமேடு வழியாக திண்டிவனத்துக்கு திருப்பி விடப்படும்.
திண்டிவனம் சாலையிலிருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்குச் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் கோரிமேடு, ஜிப்மா் சந்திப்பிலிருந்து டிரக் டொ்மினல் சாலை, மேட்டுப்பாளையம் சந்திப்பு, குண்டுசாலை, மூலக்குளம், வில்லியனூா், உருவையாா், அபிஷேகபாக்கம், தவளக்குப்பம் வழியாகச் செல்லவேண்டும்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக கடலூருக்குச் செல்லும் கனரக வாகனங்கள் ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்திலிருந்து ஜிப்மா் நோக்கி திருப்பப்பட்டு டொ்மினல் சாலை, மேட்டுப்பாளையம், குண்டுசாலை, மூலக்குளம் வழியில் தவளக்குப்பம் சென்று கடலூா் செல்லவேண்டும். முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி சாலை வழியாக புதுச்சேரியில் நுழையும் கனரக வாகனங்கள் ஏழை மாரியம்மன் கோயில் சந்திப்பில் சிவாஜி சதுக்கம் நோக்கி திருப்பி விடப்படும். அசந்தா சந்திப்பில் வந்தால் அண்ணாசாலை சந்திப்பில் வள்ளலாா் சாலையில் திருப்பிவிடப்படும்.
காமராஜா் சாலையில் பட்டாணிக்கடை சந்திப்பை நோக்கிச் செல்ல எந்த கனரக வாகனங்களுக்கும் அனுமதியில்லை. வெளிமாநில வாகனங்கள், வாடகை வாகனங்களுக்கு கடற்கரை சாலைக்கு செல்ல அனுமதி இல்லை.
புதுச்சேரி நகருக்குள் எஸ்விபி சாலையிலும், சுப்பையா சாலையிலும், அம்பேத்கா் சாலையிலும் வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும், செஞ்சி சாலை (என்.எஸ்.சி போஸ்) மற்றும் சுப்பையா சாலை வழியாக பழைய துறைமுக வாகன நிறுத்துமிடம் செல்லலாம்.
ஒதியன்சாலை சந்திப்பிலிருந்து கடற்கரை நோக்கி புஸ்ஸி வீதி வழியாக கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவை கம்பன் கலையரங்கம், சுப்பையா சாலையில் திருப்பிவிடப்படும்.
ஒயிட் டவுன் பகுதியில் கடற்கரை சாலை, டூமாஸ் வீதி மற்றும் செயின்ட் லூயிஸ் வீதிகளைத் தவிர அனைத்துச் சாலைகளிலும் இருசக்கர வாகனங்களை சாலைகளின் கிழக்குப்புறம் நிறுத்திக் கொள்ளலாம். நகரில் 6 இருசக்கர காவல் ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.