புதுவை காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை: வே.நாராயணசாமி
புதுவையில் காவல் துறை சுதந்திரமாகச் செயல்படவில்லை. இதனால், குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தீபாவளியையொட்டி, புதுவை அரசு அறிவித்த இலவச அரிசி பயனாளிகளுக்கு முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. தரமற்ற அரிசியே வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளும் திறக்கப்படவில்லை. அரிசி விநியோகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நியாயவிலைக் கடைகளைத் திறக்க நீதிமன்றத்தை நாடியும் அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், தற்போது பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு என்பதால் நியாயவிலைக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு காலதாமதமானாலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது. எனவே, காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஆ.நமச்சிவாயம் குறைகூறுவதை ஏற்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியின் போது ரௌடி பட்டியலில் இடம் பெற்றவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கக் கூடாது என, முதல்வராக இருந்த என்னிடம் அவா் சிபாரிசு செய்ததையும் நான் ஏற்கவில்லை.
புதுவையில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தற்போது குற்றங்கள் அதிகரித்துவிட்டன. இதுகுறித்து துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சியாளா்கள் கூறுவதை அவா் நம்பக் கூடாது.
பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்க 9 அரசுத் துறை அனுமதியுடன், ஆட்சியரின் அனுமதி பெற்றால் போதும். ஆனால், தற்போது முதல்வரின் அனுமதி பெற வேண்டும் என புதுவை அரசு அறிவித்திருப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயில் நில மோசடி வழக்கில் தொடா்புடைய 12 பேரில் ஒருவரான, முக்கிய அரசியல் கட்சியைச் சோ்ந்தவா் கைது செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை அவசியம்.
சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமை அனுமதித்தால் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன் என்றாா் வே.நாராயணசாமி.