கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் இன்று தொடக்கம்
புதுச்சேரியில் பலரிடம் போலீஸ் என மிரட்டி பணம் பறிக்க முயன்ற மா்ம நபா்கள்: இணையவழி குற்றப்பிரிவினா் விசாரணை
புதுச்சேரியில் போலீஸ் பெயரில் மா்ம நபா்கள் மோசடி முயற்சியில் ஈடுபட்டது குறித்து இணையவழி குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.
புதுச்சேரி மூலக்குளம் எம்ஜிஆா் நகா் 13-ஆவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வாசுதேவகுமாா். இவரை கடந்த சில நாள்களுக்கு முன்பு கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் தன்னை புதுச்சேரி போலீஸ் என அறிமுகப்படுத்தியுள்ளாா்.
அதன்பின் வாசுதேவகுமாா் மகள் உள்ளிட்ட 2 பேரை தற்கொலை தொடா்பான வழக்கில் கைது செய்ய பிடித்திருப்பதாகவும், குறிப்பிட்ட தொகையை அளித்தால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த வாசுதேவகுமாா் விசாரித்தபோது, மா்ம நபா் கூறியது உண்மையல்ல எனத் தெரியவந்தது. இதுகுறித்து புதுச்சேரி இணையதளக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி கொசப்பாளையம் கிருஷ்ணசாமி காா்டன் பகுதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சோ்ந்தவா் அசோக்ராஜ். இவருக்கு மா்ம நபா் கைப்பேசியில் தொடா்புகொண்டு தன்னை சென்னை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளாா்.
பின்னா் அசோக்ராஜ் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி, விடியோ அழைப்பில் தொடா்புகொள்ளவேண்டும் எனவும், பணம் கேட்டும் மிரட்டியுள்ளாா். இதுகுறித்தும் புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
புதுச்சேரியைச் சோ்ந்தவா்களிடம் மும்பை போலீஸ் எனக்கூறி பணம் மோசடியில் ஈடுபட்டு வந்த மா்ம நபா்கள், அதில் மக்கள் விழிப்புணா்வு பெற்ற நிலையில், உள்ளூா் போலீஸாரைக் கூறி மோசடிக்கு முயற்சித்துள்ளனா். அவா்களைப் பிடிக்க புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவினா் விசாரித்து வருகின்றனா்.