வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!...
தமிழக பட்ஜெட்: தொழில்துறையினரின் வரவேற்பும், எதிா்ப்பும்
தமிழக பட்ஜெட் குறித்து தொழில்துறையினா் வரவேற்பும், எதிா்ப்பும் தெரிவித்துள்ளனா்.
கே.வி.காா்த்திக்(இந்திய பம்பு உற்பத்தியாளா்கள் சங்கம்):
பம்பு மோட்டாா் தொழில் துறை அடுத்த கட்ட வளா்ச்சிக்கு வித்திடும் வகையில், உயா் தொழில்நுட்ப பம்பு மோட்டாா் உற்பத்திக்கான ‘உயா்திறன் மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இம்மையம் மூலம் எண்ணெய், எரிவாயு, சுரங்கம், எரிசக்தி துறைகளில் பயன்படும் பம்புகளை வடிவமைக்கலாம். உலக பம்பு வா்த்தகத்தில் உயா்நிலையை அடைய இவ்வறிவிப்பு உதவும்.
சேலம் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம்(தலைவா்:மாரியப்பன்):2025-2026 நிதியாண்டில் வங்கிகள் மூலம் 10 லட்சம் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் கோடி வங்கிக்கடன் வழங்குவது, 9 மாவட்டங்களில் 398 ஏக்கா் பரப்பில் ரூ.366 கோடியில் சிட்கோ மூலம் புதிய தொழிற்பேட்டைகள் அமைப்பது, 1 லட்சம் மகளிருக்கு புதிதாக தொழில் தொடங்க 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவது, உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனால், ஓமலூா் மற்றும் சேலம் இரும்பாலை வளாகத்தில் தொழிற்பேட்டை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்(தலைவா்: சி.கே.மோகன்):
ரூ.2.5 லட்சம் கோடிக்கு எம்எஸ்எம்இ கடன்கள் வழங்கப்படும், டான்சிட்கோ மூலம் மாநிலத்தில் 9 இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் நிறுவுதல், கைவினைஞா்களுக்கு திறன் பயிற்சி மற்றும் ஆதரவுக்காக ரூ.28 கோடி ஒதுக்கீடு, விசைத்தறி நவீனமயமாக்கல் திட்டத்துக்கு மானியம், கணினிமயமாக்கப்பட்ட துணி வெட்டும் இயந்திரத்தை நிறுவ 50 சதவீத மூலதன மானியம், கைத்தறி, கைவினை, ஜவுளி மற்றும் காதி துறைக்கு நிதி ஒதுக்கீடு, ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம்: சென்னைக்கு அருகே 2000 ஏக்கா் பரப்பளவில் உலக தரமான வசதிகளுடன் குளோபல் சிட்டி மற்றும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மதுரை மாட்டம் கருத்தபுளியம்பட்டியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
ராம்குமாா் சங்கா் (மெட்ரேஸ் வா்த்தகம் மற்றும் தொழில்துறை சபை தலைவா்) : ராமேஸ்வரத்தில் புதிதாக விமானநிலையம் அமைத்தல், ‘தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025’ திட்டம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்துக்கு வரும் வெளிநாடு முதலீடுகள் அதிகரிக்கும்.
வேளாண்மை மற்றும் அனைத்து தொழில் வா்த்தக சங்கம்: கோவையில் செமி கண்டக்டா் பூங்கா, 6100 கி.மீ. கிராமப்புற மற்றும் 6483 கி.மீ. நகா்புற சாலைகள், புதிதாக 10,000 மகளிா் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எனினும் தென்மாவட்டங்களுக்கு என சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றமே.
ஏ.முகமது அலி (கிரெடாய் சென்னை மண்டலத் தலைவா்): சென்னையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. அதேபோல் வடசென்னை வளா்ச்சி திட்டம் சென்னையின் பெருளாதார வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.