தருமபுரி: `சாலை வசதி இல்லை' - கிடைக்காமல் போன துரித சிகிச்சை; பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சோகம்!
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் அலகட்டு எனும் மலை கிராமம் அமைந்துள்ளது. இம்மலை கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில்கூட மாவட்ட ஆட்சியருக்கு `உங்கள் ஊரில் முதல்வர்' திட்டத்தின் கீழ் மனுக்கள் அளித்துள்ளனர்.
ஆனால் அம்மனுவுக்கு எந்தவித பதிலும் கிடைக்காததால், அப்பகுதி பொதுமக்களே தாமாக முன்வந்து சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போதும் வனத்துறையினர் இதில், `பாதை போடக் கூடாது' என தடுத்ததாகவும் இங்கு உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இம்மலைக்கிராமத்தில் ருத்ரப்பா- சிவலிங்கி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள், 1 ஆண் பிள்ளை என 5 பிள்ளைகள். இந்த நிலையில் தம்பதியின் இளைய மகள் கஸ்தூரி (13) என்பவர் இன்று காலை தங்களது வீட்டு அருகே கீரை பறித்தபோது, அவரை பாம்பு கடித்துள்ளது. இதையறிந்த கிராம மக்கள், உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸும் வரவில்லை. இதனால் தூளி கட்டி காட்டுப்பாதை வழியாக மலை அடிவாரமான சீங்காடு என்ற இடத்திற்கு சிறுமியை எடுத்து வந்துள்ளனர்.
சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கும் மேல் வனப்பகுதியை கடந்து வந்த நிலையில், சீங்காடு பகுதியை அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அங்கு தயார் நிலையில் இருந்த ஆட்டோவில் ஏற்ற முயன்றபோது, சிறுமி உயிர் பிரிந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலை கிராமங்களுக்கு சாலை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.