யாருக்கும், எதற்கும் பயமில்லை..! பாஜகவில் சேர்ந்தது குறித்து கைலாஷ் கெலாட் பேட்ட...
திண்டுக்கல்: "30 அரசுப் பள்ளிகளில் மைதானம் இல்லை" - ஆர்டிஐ சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் என்னென்ன?
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரதிஷ் பாண்டியன். சமூக ஆர்வலரான இவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற்று மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 170 அரசுப் பள்ளிகளில் 30 பள்ளிகளில் மைதானங்கள் இல்லை. 93 உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லை என்ற தகவலைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றிருப்பதாகச் சொல்கிறார் ரதீஷ் பாண்டியன்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், ஆத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்பன உள்பட விளையாட்டுத்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அரசுப் பள்ளிகளில் மைதான வசதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ரதிஷ் பாண்டியன், "திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் காமராஜரால் தொடங்கப்பட்ட அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்கள் விளையாட்டு மீது தீவிர ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் காவல்துறை, ராணுவம், ரயில்வே உள்ளிட்ட பணிகளுக்குச் செல்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அரசுப் பள்ளியில் மைதானம் இல்லாததாலும், உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததாலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பணிகளுக்கு விளையாட்டு வீரர்களுக்குத் தனியாக மதிப்பெண் கிடைக்கிறது. அந்த மதிப்பெண்களைப் பெற முடியாமல் வேலை வாய்ப்பைப் பெறுவதிலும் சிரமம் உள்ளது.
உடற்பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை விளையாடவும், உடற்பயிற்சி செய்யவும் விடாததால் மாணவர்கள் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, உடற்கல்வித்துறை போன்றவற்றிடம் பல முறையிட்டுப் பார்த்தேன். மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மைதானங்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன்.
அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 30 பள்ளிகளில் மைதானங்கள் இல்லை. குறிப்பாக, 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லை. மேலும், மைதானங்கள் இருக்கும் சில பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லாமலும், மைதானங்கள் இல்லாத பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களும் உள்ளனர் என்பது தெரியவந்தது. எனவே அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மட்டுமில்லாது அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மைதானங்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்க உள்ளேன்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb