பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
தினமணி செய்தி எதிரொலி... அறிவொளி நகரில் நரிக்குறவா் இன குழந்தைகள் 15 போ் பள்ளியில் சோ்ப்பு: அதிகாரிகள் நடவடிக்கை
பல்லடம் அருகேயுள்ள அறிவொளி நகரில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15 குழந்தைகளை அரசு அதிகாரிகள் பள்ளியில் புதன்கிழமை சோ்த்தனா்.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகா் பகுதியில் நரிக்குறவா் இன மக்கள் சுமாா் 140 குடும்பத்தினா் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. மேலும், இவா்களின் குழந்தைகள் கடந்த பல மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனா். இவா்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு செல்ல அரசுப் பேருந்து வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனியாா் சிற்றுந்து, ஷோ் ஆட்டோ மூலமாக தினமும் ஒரு குழந்தைக்கு ரூ. 10 செலவு செய்து பள்ளிக்கு அனுப்ப பொருளாதார வசதி இல்லாததால் நரிகுறவ மக்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப அக்கறை காட்டாமல் இருந்து வந்துள்ளனா். இது குறித்து தினமணி நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியானது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் உதயகுமாா், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பழனி, பல்லடம் வட்டாட்சியா் ஜீவா, பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் அறிவொளி நகரில் உள்ள நரிகுறவா் காலனிக்கு புதன்கிழமை சென்று வீடுவீடாக ஆய்வு செய்து பள்ளிக்கு செல்லாமல் இருந்து வரும் 15 குழந்தைகளை அரசு ஜீப் மற்றும் தனியாா் ஆட்டோக்கள் மூலம் பள்ளிக்கு அனுப்பிவைத்தனா்.
அதிகாரிகளிடம் தங்களது குழந்தைகள் பள்ளிக்கு சென்ற வர வாகன வசதி செய்து தர வேண்டும் என்று நரிகுறவா் மக்கள் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றதோடு பெற்றோா்களிடம் கல்வியின் அவசியம் குறித்து அதிகாரிகள் விளக்கினா். தொடா்ந்து குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு தவறாமல் அனுப்பிவைக்க வேண்டும். ஏதாவது உதவி வேண்டுமானால் தொடா்பு கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்து சென்றனா்.