`தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன்' - பிரபலங்கள் பங்கேற்ற கவின் கேர் இல்லத் திரு...
``திமுக-வில் போதைப்பொருள் கடத்தலுக்கு எனத் தனியாக ஒரு அணியை வைத்துவிடலாம்" - ஹெச்.ராஜா காட்டம்
"கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக என்ன சாதித்தீர்கள்?. கட்சி சைலன்ட் மோடில் இருப்பதாக விமர்சனம் கிளம்பியிருக்கிறதே?"
"மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். பெரிய அளவில் உறுப்பினர்களை இணைத்து வருகிறோம். இதனால் ஆர்ப்பாட்டம், போராட்டம் இக்காலத்தில் வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம். மேலும் உட்கட்சி தேர்தல்கள் நடந்து வருகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் ஒன்றிய, நகரத் தேர்தல்கள் முடியும். இரண்டாவது வாரத்தில் மாவட்ட தலைவர் தேர்தல் முடிவடையும். ஜனவரி முதல் வாரத்தில் மாநில தலைவர் தேர்வு செய்யப்படுவார். பிறகு மற்ற நடவடிக்கைகள் இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும் கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகிறது. இந்த 60 நாட்களில் ஒன்றும் குடி மூழ்கிப் போகாது. தமிழகம் கடந்த 57 ஆண்டுகளாகத் திராவிட கட்சிகளிடம் மாட்டிச் சிக்கித்தவித்து வருகிறது. இன்னும் 57 நாட்கள்தான்"
"விரைவில் அண்ணாமலை தமிழகம் திரும்புகிறார். அதன்பிறகு ஒருங்கிணைப்பு குழு செயல்படுமா?"
"மாநில தலைவர் இல்லாதபோது கட்சிப்பணிகளை பார்க்க வேண்டும் என்பதற்குத்தான் ஒருங்கிணைப்புக் குழுவைத் தேசிய தலைமை அறிவித்திருக்கிறது. திடீரென ஏன் சீண்டிப் பார்க்கிறார்ர்கள்.. எப்படியாவது ராஜாவையும், அண்ணாமலையையும் சண்டைபோட வைக்கலாம் என நினைக்கிறீர்களா?"
" 'ஒரு கட்சியின் வாக்கு வங்கி 12% கீழ் சென்றுவிட்டது'என மறைமுகமாக அ.தி.மு.க-வை அண்ணாமலை சீண்டியதற்கு, தமிழிசை தி.மு.க-வை வீழ்த்துவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்' எனச் சொல்லியிருக்கிறாரே?"
"நான் 35 ஆண்டுகாலமாக பா.ஜ.க-வில் இருக்கிறேன். என் அளவுக்கு யாருக்கும் சீனியாரிட்டி இல்லை. ஆனால் ஒருநாள் கூட கூட்டணி குறித்து நான் ஊடகத்தில் விவாதித்தது கிடையாது. ஏனெனில் அது மத்திய தலைமை முடிவு செய்ய வேண்டிய விஷயம். அவர்கள் எடுக்கும் முடிவுப்படிதான் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பா.ஜ.க தலைவர்களும் செயல்பட வேண்டும். எனவே அதுகுறித்து விவாதிக்க வேண்டிய இல்லை."
"அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க உங்கள் தலைவர்கள் விரும்பும் சூழலில், 'பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை' என்கிறாரே எடப்பாடி?"
"எட்டப்படியாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என அப்ளிகேஷன் போட்டுவிட்டு பா.ஜ.க காத்திருக்கிறது என என்றைக்காவது நாங்கள் சொன்னோமா?. எங்களுக்கு யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்கிற விரும்பும் இருக்கிறதோ, அதைத் தேசிய தலைமையிடம் தெரிவிப்போம். அவர்கள் எடுக்கும் முடிவின் படி தமிழக தலைவர்கள் செயல்படுத்துவார்கள்."
" 'நீங்கள் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பேசுகிறீர்கள்' என்கிறார்களே ஜவாஹிருல்லா ஆதரவாளர்கள்?"
"ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பைச் சேர்த்தவன், புர்ஹான் வானி. ராணுவத்துடன் சண்டையிடும்போது கொல்லப்பட்ட புர்ஹான் வானிக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தியவர்கள் நிச்சயமாகத் தேசத் துரோகிகள் தானே?. காஷ்மீர் விஷயத்தில் ராணுவத்துக்கு எதிராகப் பேசும் அனைவரும் தேசத் துரோகிகள்தான். இந்தியாவை நேசிக்காதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்கிறேன். இதில் எப்படி மதக்கலவரம் வரும்?. அப்படி மதக்கலவரம் வரும் எனப் பேசுகிறார்கள் என்றால் அவர்கள் தேச பக்தர்களா எனப் பார்க்க வேண்டும்."
"அமரன் படத்தை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள் என்கிறீர்கள். கடைசி 20 நிமிடங்கள் என் இதயத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டதாகக் கொண்டாடும் சீமானை என்ன சொல்லப் போகிறீர்கள்?"
"அமரன் படத்தைப் பாராட்டிய முதல்வர், சீமான் என யாராக இருந்தாலும் பாராட்டுதலுக்குரியவர்கள்தான். அது தேசபக்தியை வளர்க்கக்கூடிய, இளைஞர்களுக்கு ஜம்மு காஷ்மீர் குறித்துச் சரியான கண்ணோட்டத்தை ஏற்படுத்தக்கூடிய படம்"
"அமரன் படத்தில் காஷ்மீர் மக்களை எதிரிகளாகச் சித்தரிப்பதுடன், ராணுவத்தில் ஜெய் பஜ்ரங் பலி என எப்போது முழக்கமிட்டார்கள் எனக் கொதிக்கிறாரே திருமுருகன் காந்தி?"
"பீகார் ரெஜிமெண்டின் கோஷம் என்னவென இந்த பொய்யர் திருமுருகன் காந்திக்குத் தெரியுமா... ஜெய் பஜ்ரங் பலிதான் பீகார் ரெஜிமெண்டின் கோஷம். வெட்டுடா, குத்துடா என்பது மெட்ராஸ் ரெஜிமெண்டின் கோஷம். அங்கு அந்த கோஷம் 75 ஆண்டுகளாக இருக்கிறது. திருமுருகன் காந்திக்கு ஏன் எரிகிறது. உடனே சங்கி என்கிறார். திருமுருகன் காந்திக்கு லுங்கி, அங்கி, மங்கி அதுதான் பிடிக்குமோ என்னவோ?.
சங்கியாக இருப்பதில் தப்பில்லை. 2016-ம் ஆண்டு ரேஷன் கடைகளை மோடி அரசு இழுத்து மூடிவிடும் என்றார். ஆனால் இன்றுவரை 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மத்திய அரசு இலவசமாகக் கொடுத்து வருகிறது. இவ்வாறு திருமுருகன் காந்தி பேசுவது எல்லாம் அபத்தம், பித்தலாட்டம், அயோக்கியத்தனம். அதைப்பற்றி ஏன் நாம் கவலைப்பட வேண்டும்"
" 'பா.ஜ.க பிளவாவதாகக் கட்சி, தி.மு.க ஊழல் கட்சி என்றெல்லாம் கூறிய த.வெ.க தலைவர் விஜய் அ.தி.மு.க-வை மட்டும் விமர்சனம் செய்யவில்லையே?"
"தி.மு.க-வை ஊழல் கட்சி எனக் கூறியது நல்ல கருத்து. எது பிளவு வாதம்?. விஜய் முற்றிலும் குழப்பமான மனிதர். சித்தாந்த ரீதியாகத் தெளிவில்லாதவர். ஒருபக்கம் ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரமங்கை வேலுநாச்சியாரின் படத்தை வைத்திருக்கிறார். மறுபக்கம் ஈ.வெ.ரா படம் இருக்கிறது. 1944-ல் நடத்திய முதல் தி.க மாநாட்டில், 'வெள்ளையன் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது. அப்படியே வெளியேறினாலும் லண்டலிருந்துகொண்டாவது சென்னையை ஆட்சி செய்ய வேண்டும்' எனத் தீர்மானம் போட்ட தேசத்துரோகிதான், ஈ.வெ.ரா. ஒருபக்கம் தேசபக்தர், மறுபக்கம் தேசத்துரோகியா?.
ஆகவே விஜய் தெளிவில்லாதவர். அ.தி.மு.க குறித்து பேசாததற்கு நான் கவலைப்பட வேண்டியதில்லை. பிரதமர் மோடி என்றைக்காவது திட்டங்களை இந்துக்களுக்கு மட்டும்தான் கொடுப்பேன் என்கிறாரா.. பிறகு எப்படிப் பிரிவினை எனச் சொல்வீர்கள்?. ஒன்று விஜய்க்கு விஷயங்கள் பற்றிய அறிவு இல்லை. இல்லை விஷமி. அதனால்தான் பா.ஜ.க-வை திட்டுகிறீர்கள்.
"தி.மு.க குறித்து விஜய் விமர்சனம் செய்ததற்கு அதன் கூட்டணிக் கட்சிகள் கொதிக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க கூட்டணியில் எந்த குரலும் இல்லையே?"
"அது அவரவர் புரிதல். விஜய் எங்கும் பா.ஜ.க என்கிற பெயரைப் பயன்படுத்தவில்லை. எனவே கூட்டணிக் கட்சிகள் அமைதியாக இருக்கின்றன."
"ஆனால் நீட் விலக்கு, ராஜ்யசபா சீட் இல்லை என பா.ம.க அதிருப்தியில் இருக்கிறது. பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டித்தான் பா.ஜ.க-வுடன் இருக்கிறோமா என முடிவு செய்வோம் என்கிறார்களே அவர்கள்?"
"ஏற்கெனவே சொன்னதுபோல இன்னும் 20 மாதங்கள் இருக்கின்றன. பா.ஜ.க கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது தேசிய தலைமைதான். அதைச் செயல்படுத்தும் இடத்தில் நான் இருக்கிறேன். எனவே கூட்டணி குறித்து நான் கருத்துச் சொல்ல மாட்டேன்"
"அ.தி.மு.க, த.வெ.க கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார்களே?"
"அத்தைக்கு மீசை முளைத்த பிறகு சித்தப்பாவா?, பெரியப்பாவா என அப்போது முடிவு செய்வோம். இன்னும் 20 மாதங்கள் இருக்கின்றன. அரசியலில் இது மிகவும் நீண்ட காலம்"
"தி.மு.க ஆட்சியில் பிராமணர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அப்படி ஒரு கூட்டம் நடத்தத் தேவையில்லை என்கிறாரே எஸ்.வி.சேகர்..."
"சேகருக்கெல்லாம் நான் பதில் சொல்லவில்லை. இன்றும் பாப்பான்கள் என்று பேசக்கூடியவர்கள் இருக்கிறார்கள் தானே.. மற்றவர்களை இதுபோல் சாதியைச் சொல்லிப் பேச முடியுமா?. ஒவ்வொரு மனிதனும், சமுதாயமும் மதிக்கத்தக்கது. அதைப்பற்றிப் பேசக்கூடாது. இதுபோன்று பேசும் இழிபுத்தியை விதைத்ததே ஈ.வெ.ரா தானே?. ஆகவே தமிழகத்தில் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என அவர்கள் கூட்டம் போட்டால் என்ன தவறு?."
"கார்த்தி சிதம்பரம், சீமான் மோதலை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
"தி.மு.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லாதபோது தனியாக கார்த்தி சிதம்பரம் தேர்தலைச் சந்தித்தார். அப்போது களத்தில் நின்றேன். முடிவில் கார்த்தி சிதம்பரத்தை விட எனக்கு 35,000 வாக்குகள் அதிகம் கிடைத்தது. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்த ஊரிலேயே செல்வாக்கு இல்லை என்பது ஊரறிந்த விஷயம். பலமான கூட்டணி இருந்தால் வெற்றிபெறுவார். சீனியர் சிதம்பரமே என்னைவிட ஒரு லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றவர்தான். அதேநேரத்தில் கார்த்தி சிதம்பரம், சீமான் இடையே நடப்பதெல்லாம் பெரிய மோதல் இல்லை. நா.த.க-வுக்கு எதிராக கார்த்தி தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறாரோ?"
"விஜய் வருகையால் பா.ஜ.க-வுக்கு பாதிப்பு என கார்த்தி சிதம்பரம் சொல்கிறாரே?"
``நா.த.க கலகலத்துப் போயிருக்கிறது என்பது உண்மைதான். நிறைய சீனியர்கள் வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். வெளியேறவும் தயாராக இருக்கிறார்கள். பெரிய பாதிப்பு தி.மு.க-வுக்குத்தான் வரும். அதேபோல காங்கிரஸுக்குக் கிடைக்கும் மத ரீதியிலான வாக்குகளும் சிதறும். கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். பா.ஜ.க தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். த.வெ.க எந்த விதத்திலும் எங்களைப் பாதிக்காது."
"குஜராத்தில் தொடர்ச்சியாகப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட 700 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறதே?"
"பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற மாநிலங்களிலிருந்து கடல் மார்க்கமாகப் போதைப்பொருள் வருகிறது. வரும் வழியில் குஜராத் இருக்கிறது. இதையெல்லாம் குஜராத் போலீஸார் கைப்பற்றுவதுடன் அந்த நபர்களைக் கைது செய்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் சின்தடிங் ட்ரக் ஒரு கிராம் கூட கைப்பற்றவில்லை. இதைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக எவ்வளவு மோசமான சக்திகள் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஜாபர் சாதிக் ரூ.3,000 கோடி அளவுக்குப் போதைப்பொருள் கடத்தினார் எனக் குற்றச்சாட்டு இருக்கிறது. ஜாபர் சாதிக், அமீருக்குக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர் தி.மு.க-வின் மாவட்ட அயலக அணியின் துணை செயலாக இருந்தவர். இதேபோல் ராமநாதபுரத்தில் இப்ராஹிம், புதுக்கோட்டையில் சுந்தரபாண்டியன் எனப் போதைப்பொருள் கடத்துபவர்கள் அனைவரும் தி.மு.க-வில்தான் இருக்கிறார்கள். எனவே அவர்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு எனத் தனியாக ஒரு அணியை வைத்துவிடலாம்"
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...