தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக இரு நீதிபதிகள் பதவியேற்பு
தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக இரு நீதிபதிகள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
உயா்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில் நீதிபதிகள் அஜய் திக்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் ஆகியோருக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி விபு பக்ரு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு வழக்குரைஞா்களை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்ததை அடுத்து, புதிய நியமனங்களை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவிக்கை செய்திருந்தது.
இரு புதிய நீதிபதிகளின் பதவிப் பிரமாணம் மூலம், தில்லி உயா்நீதிமன்றத்தில் தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது. உயா்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலம் 60 ஆகும்.
தமிழகத்தைச் சோ்ந்த நீதிபதி தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் தமிழகத்தைச் சோ்ந்தவா். இவரது குடும்பத்தினா் தமிழகத்தின் பொள்ளாச்சியைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
18.2.1974-இல் பிறந்த இவா், பெங்களூரு செயின்ட் ஜோசப் கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. பட்டமும், புதுதில்லியில் சட்டக் கல்வியில் இளங்கலைப் பட்டமும், இங்கிலாந்தில் உள்ள வாா்விக் பல்கலை.யில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளாா்.
ஆரம்பத்தில் 1995 ஜூன் முதல் ஜூன், 1996 வரை மூத்த வழக்குரைஞா்கள் கே.கே.வேணுகோபால், சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோரிடம் தொழில்பயிற்சி பெற்றாா்.
அதன் பிறகு, தில்லி உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், நுகா்வோா் அமைப்பு உள்ளிட்டவற்றில் வழக்குரைஞராக தொழில் செய்து வந்தாா்.
2009 முதல் தற்போதுவரை தில்லி உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல்வேறு சிவில், கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளாா். 45 ஆண்டுகளாக தில்லியில் வசித்தாலும் தமிழில் பேச, எழுதக் கூடியவா். மலையாளமும் அறிந்தவா். இவரது தந்தை சி.எஸ். வைத்தியநாதன் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞா் என்பது குறிப்பிடத்தக்கது.