தில்லி தேர்தல்: கேஜரிவால், அதிஷி உள்ளிட்டோர் வாக்களித்தனர்!
தில்லி பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கேஜரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 19.95% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தில்லி வடகிழக்கு மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8 என்று எண்ணப்பட உள்ளன.
![](https://media.assettype.com/dinamani/2025-02-05/sxw4gypn/jjj.png)
இதையும் படிக்க | தில்லி தேர்தல்: சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி வாக்களித்தனர்!
தில்லி பேரவைத் தேர்தலில் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.
தில்லியில் உள்ள லேடி இர்வின் பள்ளியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் புதுதில்லி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளருமான அரவிந்த் கேஜரிவால், மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் பெற்றோர்களுடன் வந்து வாக்களித்தார்.
தில்லியின் வளர்ச்சிக்காக தில்லி மக்கள் அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கேஜரிவால் தெரிவித்தார்.
தில்லி முதல்வர் அதிஷியும் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில், 'இது உண்மைக்கும் பொய்களுக்குமான தர்மயுத்தம். உண்மை வெல்லும்' என்று கூறினார்.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தில்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, ஆம் ஆத்மி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சத்யேந்திர ஜெயினும் வாக்களித்தனர்.