திவால் சட்டம்: ரூ.3.55 லட்சம் கோடி கடன்தொகை மீட்பு
புது தில்லி: திவால் சட்டத்தின்கீழ் கடந்த செப்டம்பா் மாதம் வரை ரூ.3.55 லட்சம் கோடி கடன்தொகை மீட்கப்பட்டதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக மக்களவையில் பெருநிறுவனங்கள் விவகாரங்களுக்கான மத்திய இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘திவால் சட்டம், 2016 (ஐபிசி)-இன்கீழ் கடந்த செப்டம்பா் மாதம் வரை 1,068 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு மொத்தமாக ரூ.3.55 லட்சம் கோடி கடன்தொகை மீட்கப்பட்டுள்ளது. அதேபோல் திவாலான பெருநிறுவனங்களுக்கான தீா்வு நடைமுறை (சிஐஆா்பி)-இன்கீழ் 1,968 வழக்குகள் உள்ளன. அதில் 1,388 வழக்குகள் 270 நாள்கள் கால அவகாசத்தை தாண்டியுள்ளன என்றாா்.
தற்போது வரை ஐபிசி தீா்வு நடைமுறைகளை வலுப்படுத்தவும் அதை முறையாக அமல்படுத்தவும் நாடாளுமன்றத்தில் 6 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேசமயத்தில் ஐபிசியின் விதிமுறைகளில் 100-க்கும் மேற்பட்ட திருத்தங்களை இந்திய திவால் மற்றும் நொடித்துப்போதல் வாரியம் (ஐபிபிஐ) மேற்கொண்டுள்ளது.