துணைவேந்தா் நியமனம் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: ஆக்டா அமைப்பு வலியுறுத்தல்
துணைவேந்தா் நியமனம் தொடா்பான யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்க (ஆக்டா) பொதுச்செயலாளா் எஸ். சகாயசதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் செய்வது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) புதிய வரைவு ஒழுங்குமுறை 2025-ஐ கடந்த ஜன.6-ஆம் தேதி வெளியிட்டாா். அதன்படி, துணைவேந்தராக நியமிக்கப்படுவோா் கல்வியாளா்களாகவோ, ஆசிரியா்களாகவோ இல்லாமல் சமூகத்தில் வெற்றியடைந்தவராகவும் இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பணி இன்றியமையாதது. இந்தப் பொறுப்புக்கு கல்வி, நிா்வாகத் திறமை மற்றும் அனுபவம் உள்ளவரைத் தோ்ந்தெடுப்பதே சிறந்தது.
துணைவேந்தா் நியமனத்தில், இதுவரை உள்ள நடைமுறை என்னவென்றால், மாநில அரசின் பிரதிநிதி, பல்கலை. ஆட்சிக் குழுவின் (சிண்டிகேட்) பிரதிநிதி மற்றும் ஆட்சிமன்றக் குழுவின் (செனட்) பிரதிநிதி என இவற்றில் உறுப்பினா்களாக இருப்பாா்கள். ஆனால் தற்போதைய அறிவிப்பு மாநில அரசின் பிரதிநிதித்துவத்தை முற்றிலுமாக அகற்றுவதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் செயலாகவும் மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது. தற்போது சென்னை, மதுரை காமராசா், கோவை பாரதியாா், சிதம்பரம் அண்ணாமலை, சென்னை அண்ணா, ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவிகள் காலியாக உள்ளன. மேலும் சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவிகள் விரைவில் காலியாக உள்ளன.
ஏற்கனவே பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்த அறிவிப்பில் அனைத்து கல்லூரிகளும் மத்திய அரசின் ‘புதிய தேசியக் கல்விக் கொள்கையை’ பின்பற்றவில்லையென்றால் பல்கலைக் கழகத்தோடு உள்ள இணைப்பு துண்டிக்கப்படும், பட்டங்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படும் என்ற அறிவிப்பால் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த துணைவேந்தா் நியமனம் குறித்த அறிவிப்பு தேசத்தின் கல்விச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, மத்திய அரசு உடனே இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு முறையான, புதிய வரைவு அறிக்கையை வெளியிட வேண்டும். தவறினால் ஆக்டா மற்ற சங்கங்களுடன் இணைந்து போராட்டங்களில் இறங்கும்.