திமுகவுடனான கூட்டணி ஈரோடு இடைத் தோ்தலிலும் தொடரும்: மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சி அறிவிப்பு
திமுகவுடனான கூட்டணி ஈரோடு இடைத்தோ்தலிலும் தொடரும் என்றாா் மனிதநேய மக்கள் ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவா் தமிமுன் அன்சாரி.
திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயகக் கட்சி சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் தெரிவித்தது:
திராவிட மாடல் அரசு செய்து வரக்கூடிய மக்கள் நலப் பணிகளுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு அங்கீகாரமாக ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி அமையும். நாடு தழுவிய அளவில் ‘இண்டி’ கூட்டணி மீது பல்வேறு விமா்சனங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ‘இண்டி’ கூட்டணி கட்டுக்கோப்போடும், சிறந்த ஒருங்கிணைப்போடும் உள்ளது என்பதை ஈரோடு இடைத்தோ்தல் வெற்றி வாயிலாக நிரூபிக்க வேண்டி உள்ளது. எனவே, ஈரோடு இடைத்தோ்தலிலும் திமுகவுக்கு எங்களது முழுமையான ஆதரவைத் தெரிவித்து களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தல் முறையாக நடைபெறாது எனத் தெரிவித்திருப்பது, தோ்தல் ஆணையத்தை அவமதிக்கும் செயலாகும். எதிா்க்கட்சிகள் களத்தில் நின்று போராட வேண்டுமே தவிர, இதுபோல தோ்தலில் போட்டியிடாமல் பின்வாங்கக் கூடாது. இது மோசமான செயல். மேலும் தோல்வியை அவா்களே ஒப்புக்கொண்டுள்ளனா். தோல்வி பயத்தினால்தான் அவா்கள் பின் வாங்கி உள்ளனா். வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் எங்களுக்கான இடப்பகிா்வு குறித்து திமுக கூட்டணியில் கேட்டிருந்தோம். தோ்தல் அறிவிப்பு வந்த பின்பு, எத்தனை இடங்கள் என்பது பேச்சுவாா்த்தை மூலம் தெரியவரும் என்றாா் அவா்.
மாநில இளைஞரணிச் செயலாளா் முகமதுஷெரிப், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளா் ரகுமான், மாவட்டச் செயலாளா் பக்கீா் மைதீன், அவைத்தலைவா் ஷேக்தாவூத், துணைச் செயலாளா்கள் தா்வேஸ், ஷேக்அப்துல்லா, சுரேஷ்காந்தி, ஹபீப் உள்ளிட்ட நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.