துண்டு துண்டாக மனைவியை வெட்டி பேக்கில் கொண்டு சென்ற கணவன்... நாய்கள் சுற்றியதால் அம்பலமான கொடூரம்!
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அமைந்துள்ள பால்குளம் பகுதியில் அரசு குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு மாரிமுத்து (35) என்பவர் கடந்த 40 நாட்களாக வசித்துவந்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி பேக்கில் எடுத்துச் செல்வதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடம் சென்ற போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸார் கூறுகையில், "திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்தான் மாரிமுத்து (35). ஆடு, பன்றி இறைச்சி வெட்டும் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு மேரி சத்தியா (30) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி உள்ளது. அவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் நெல்லை மாவட்டத்தில் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். மேரி சத்தியா தூத்துகுடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்திருக்கிறது. வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்லும் சத்தியாவை நேற்று முன் தினம் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வரமாறு கூறியுள்ளார் மாரிமுத்து. பஸ்ஸில் வந்த சந்தியாவிடம் சாலையில் வைத்தே தகராற்றில் ஈடுபட்டுள்ளார் மாரிமுத்து. அதன்பிறகு வாடகை ஆட்டோவில் தங்களது வீட்டிற்கு வந்துள்ளனர்.
வீட்டில் சென்றதும் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களின் வாக்குவாதம் வெளியில் யாருக்கும் கேட்காதவாறு டி.வி சத்தத்தை அதிகமாக வைத்துள்ளார் மாரிமுத்து. பின்னர் அரிவாளால் மனைவியை வெட்டி கொலை செய்திருக்கிறார். உடலை எங்காவது வீசிவிடவேண்டும் என்ற முடிவோடு தலையை தனியாக வெட்டியதுடன், உடலை நேராக இரண்டு பாகமாக வெட்டி பின்னர் இறைச்சியை வெட்டுவது போன்று சிறு துண்டுகளாக்கியிருக்கிறார்.
ரத்தம் வழியாமல் இருக்க உடல் பாகங்களை தண்ணீரில் கழுவி 3 பேக்குகளில் வைத்து கட்டியிள்ளார். அந்த பைகளை ஆள் அரவமற்ற இடத்தில் வீசும் நோக்கத்துடன் பைகளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். அப்போது அவரது பையை நாய்கள் மோப்பம் பிடித்து துரத்தியதுடன், மாரிமுத்துவை சுற்றிச்சுற்றி நாய்கள் குரைத்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர், மாரிமுத்துவிடம் பையில் என்ன இருக்கிறது என விசாரித்தனர். காட்டுப்பன்றி கறி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனாலும், சந்தேகமடைந்த அப்பகுதியினர் மாரிமுத்துவை நிறுத்தி பையை திறந்து பார்த்திருக்கிறார்கள்.
பைகளில் உடல் உறுப்புக்கள் இருந்ததை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அது மேரி சந்தியா உடல் கூறுகளாக இருக்கலாம் என யூகித்த அப்பகுதியினர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் அங்கு சென்று மாரிமுத்து-வை கைது செய்தனர். மாரிமுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனைவி மீது சந்தேகத்தால் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் அவர் கூறியுள்ளார்.
போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தால்தான் முழு விபரமும் தெரியவரும்" என்றனர். மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி தண்ணீரில் கழுவி பையில் நிரப்பி எடுத்துச் சென்ற கொடூர கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.