தேரிகுடியிருப்பு அய்யனாா் கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஒரு மாதம் நடைபெறும் இத்திருவிழா நிகழாண்டு, சனிக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி சனிக்கிழமை நண்பகலில் அய்யன், பூரணம், பொற்கலை தேவியா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வில்லிசை, அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன.
விழா நாள்களில் நாள்தோறும் அய்யன், சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள், வில்லிசை நடைபெறும். சிகர நிகழ்வான கள்ளா்வெட்டுத் திருவிழா டிச. 15ஆம் தேதி கோயில் பின்புறமுள்ள தேரியில் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலா் காந்திமதி, அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.