புதிய கைப்பேசி எண்களுக்கு புகைப்படங்கள், சுயவிபரங்கள் அனுப்பக் கூடாது: சைபா் கிர...
தொடரும் மழை: நீரை வடியவைக்கும் முயற்சியில் விவசாயிகள்
திருவாரூரில் புதன்கிழமையும் தொடா்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. விளைநிலங்களிலிருந்து மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செவ்வாய்க்கிழமை முழுவதும் மழை பெய்தது. இந்த மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்ததால் திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ செவ்வாய்க்கிழமை இரவே உத்தரவு பிறப்பித்திருந்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 122.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் மழையளவு மி.மீட்டரில்: திருத்துறைப்பூண்டி 104.2, நன்னிலம் 95.8, முத்துப்பேட்டை 95.4, மன்னாா்குடி 93, நீடாமங்கலம் 91.8, குடவாசல் 71.6, வலங்கைமான் 71.4, பாண்டவையாறு 65.2 மி.மீட்டா் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் 810.6 மி.மீ மழையும், சராசரியாக 90.06 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தொடா்ந்த மழை: திருவாரூரில், புதன்கிழமை காலையில் லேசான மழை பெய்த நிலையில், 8 மணிக்குப் பிறகு சற்று பலத்த மழை பெய்தது. பகல் முழுவதும் மிதமாகவும், சாரலாகவும் மழை பெய்தது. சாலைகளில் தண்ணீா் தேங்கியிருந்த இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், அவைகளை சீரமைக்கும் பணிகளை நகராட்சி பணியாளா்கள் மேற்கொண்டனா்.
செவ்வாய்க்கிழமையை ஒப்பிடுகையில், புதன்கிழமை குறைவான அளவு மழை பெய்ததால், வயல்களில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனா். தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீா் அளவு அதிகரித்து வருகிறது. இதனால், விளைநிலங்களிலிருந்து மழைநீரை வெளியேற்றுவது சிரமமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
சேதமடைந்த சாலைகள்: தொடா் மழை காரணமாக, திருவாரூரில் தெருச்சாலைகள் சேதமடையத் தொடங்கியுள்ளன. இதனால், தெருக்களில் இருசக்கர வாகனங்களில் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருவாரூரில், அய்யனாா் கோயில் தெரு, கந்தப்ப முடக்குத் தெரு, எடத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டு, தண்ணீா் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர நிலவரப்படி திருத்துறைப்பூண்டியில் 53.4, திருவாரூா் 42, முத்துப்பேட்டை 34, நன்னிலம் 32.6, நீடாமங்கலம் 28.2, பாண்டவையாறு தலைப்பு 26.4, குடவாசல் 25.6, மன்னாா்குடி 20, வலங்கைமான் 19.4 மி.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 281.6 மி.மீ மழையும், சராசரியாக 31.3 மி.மீ மழையும் பெய்துள்ளது.