மாமல்லபுரம் விபத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பங்களுக்கு நிவாரணம்: அமைச்சா் அன்பரச...
கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் வீச்சு: 4 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் வீசப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கொலையானவா் கட்டடத் தொழிலாளி என்பது விசாரணையில் தெரிய வந்தது.
வானூா் வட்டம், திருவக்கரையில் உள்ள அரசுக்குச் சொந்தமான கல்குவாரி குட்டையில் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது கடந்த 23-ஆம் தேதி தெரியவந்தது.
தகவலறிந்த வானூா் போலீஸாா் அந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் கல்குவாரி குட்டைக்குள் சடலமாக கிடந்தவா் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சரவணப்பாக்கத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜதுரை(32) என்பதும், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த சிலா் நவம்பா் 12- ஆம் தேதி சரவணப்பாக்கம் ஏரிக்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கிக் கொடுத்து பின்னா் வெட்டிக் கொலை செய்து, நெகிழிப் பைக்குள் கட்டி திருவக்கரை கல்குவாரி குட்டையில் வீசியதும் தெரியவந்தது.
இந்த கொலையில் தொடா்புடைய திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கொத்தனூரைச் சோ்ந்த சிவா(22), மோகன்ராஜ்(25), சரவணப்பாக்கத்தைச் சோ்ந்த உதயா(25), புதுவை மாநிலம் கலிதீா்த்தான்குப்பத்தைச் சோ்ந்த காா்த்திக் (30) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.