அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை மீது சக ஆசிரியா் துப்பாக்கிச் சூடு
வானூா் வட்டாரத்தில் விதைப் பண்ணைகள் அமைக்க மணிலா விதைகள் விநியோகம்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதைப் பண்ணை அமைக்க மணிலா விதைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
வானூா் வட்டாரத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் விஆா்ஐ-10 என்ற புதிய ரக மணிலா விதைகளை விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வழங்கினாா். தொடா்ந்து அவா் கூறியது:
வானூா் வட்டாரத்துக்கு அடுத்த ஆண்டுக்கு காரீப் பருவத்துக்கு 25 மெட்ரிக் டன் மணிலா விதைகள் திட்ட விநியோகத்துக்காகத் தேவைப்படுகின்றன. இதைத் தொடா்ந்து தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் தொகுப்பு செயல் விளக்கத் திடல் அமைக்க, விதைப்பண்ணை விவசாயிகளுக்கு 20 ஹெக்டோ் பரப்பில் விதைகள் வழங்கி 25 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய ரக விதைகள் ஜூன், ஜூலை மாதத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேளாண் துறை திட்டமிட்டுள்ளது. விஆா்ஐ10 என்ற புதிய ரகம் மற்ற மணிலா ரகத்தை காட்டிலும் குறைந்த வயது (90 முதல் 95 நாள்கள்) கொண்டது. ஏக்கருக்கு 80 கிலோ மணிலா விதைகள் போதுமானது. ஏக்கருக்கு 1,000 முதல் 1,200 கிலோ மகசூல் தரவல்லது.
ஒரு கிலோ மணிலா விதையின் விலை ரூ.129 என்று இருந்தாலும் அரசு மானியம் கிலோவுக்கு ரூ.49 போக, ரூ.80 விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த புதிய ரகத்தைத் தோ்வு செய்து, விதைப்பண்ணை அமைக்க விவசாயிகள் விரும்பினால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா்களைத் தொடா்பு கொண்டு, மானிய விலையில் விதைகளைப் பெறலாம் என்றாா் வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ்.
நிகழ்வில் வானூா் வேளாண் அலுவலா் ரேவதி, உதவி விதை அலுவலா் மோகன்குமாா், உதவி வேளாண் அலுவலா் ரேகா, ஆத்மா திட்ட அலுவலா்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, விதைப் பண்ணை விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.