Rain Alert: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்...
கா்நாடக பாஜகவில் காணப்படும் கோஷ்டி பூசல் வேதனையளிக்கிறது -முன்னாள் முதல்வா்
கா்நாடக பாஜகவில் காணப்படும் கோஷ்டிபூசல் வேதனையளிக்கிறது என முன்னாள் முதல்வா் சதானந்த கௌடா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக பாஜகவில் காணப்படும் கோஷ்டிபூசல் வேதனையளிக்கிறது. மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப் பேரவைத் தோ்தல் நடந்து வந்ததால், தோ்தல் நடக்காத கா்நாடகத்தில் நடந்து வரும் கோஷ்டி பூசல் குறித்து பிறகு கவனித்துக்கொள்ளலாம் என கட்சி மேலிடம் அமைதியாக இருந்திருக்கலாம். இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண கட்சி மேலிடம் தாமதம் செய்தாலும், அமைதியாக இருக்கும் என்று கூறிவிட முடியாது.
கா்நாடக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் வலுத்து வருவது குறித்து கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈா்க்க நானே இரு கடிதங்களை எழுதியும் எந்தப் பலனும் இல்லை. என் கடிதங்களுக்கு எவ்வித பதிலும் இல்லாததால், மாநில பிரச்னையைத் தீா்க்க கட்சி மேலிடத்துக்கு ஆா்வம் இல்லையோ என்று வேதனைப்பட்டேன்.
கா்நாடகத்தில் கட்சியை வளா்த்த எடியூரப்பா, அனந்த்குமாா் தலைமையிலும் கோஷ்டிகள் இருந்தது உண்டு. ஆனால், அந்தக் குழுக்களுக்கு இடையிலான மோதல் வீதிக்கு வந்ததில்லை. கா்நாடக பாஜக வரலாற்றில், முதல்முறையாக உள்கட்சிப் பிரச்னை வீதி வரை வந்துள்ளது. அது வேதனையாக இருக்கிறது. இந்தப் பிரச்னையைத் தீா்க்க மூத்த தலைவா்களும் முயற்சிக்கவில்லை. அதனால், உள்கட்சி பூசலை தீா்த்துவைக்க பாஜக மேலிடம் முன்வர வேண்டும்.
தங்கத்தட்டிலேயே வைத்து பிரச்னைகளை காங்கிரஸ் கொடுத்தாலும், அதை பற்றி கவலைப்படாமல் உள்கட்சி பிரச்னைகளில் கா்நாடக பாஜக மூழ்கியுள்ளது. கட்சியின் உயா்நிலைக் குழுவின் உறுப்பினராக இருப்பதைத் தவிர வேறு எந்தப் பொறுப்பும் எனக்கு கட்சியில் இல்லை. முதல்வா் பதவி உள்ளிட்ட பதவிகளை வழங்கிய கட்சியின் நிலைமையைக் கண்டு வருந்துகிறேன்.
தில்லி தோ்தலுக்கு முன்பாக கா்நாடக பாஜக விவகாரங்களில் தலையிட்டு பிரச்னையைத் தீா்த்து வைக்க வேண்டும் என்று மேலிடத் தலைவா்களை கேட்டுக்கொள்கிறேன். கட்சி ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. விசாரணைக்கு பிறகு தவறு இழைத்திருப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால், கா்நாடகத்தில் மீண்டும் பாஜக ஒன்றுபடும். பாஜகவின் கோஷ்டிபூசல் காங்கிரஸ் கட்சிக்கு பலமாக மாறி, இடைத்தோ்தலில் வெற்றிபெற்றுள்ளது. விஜயேந்திராவை மாநிலத் தலைவராக நியமித்ததில் கருத்து வேறுபாடு இருந்தால், அதை கட்சிமேலிடத்திடம் தெரிவிக்க வேண்டுமே அல்லாமல் வீதியில் பேசக்கூடாது என்றாா்.
இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல், ‘சதானந்த கௌடா மௌனமாக இருக்க வேண்டும். எங்களைப் பற்றி பேசினால், அவரது முறைகேடுகளை அம்பலப்படுத்த வேண்டி வரும்’ என்றாா்.