கா்நாடகத்தில் ரூ. 46,375 கோடிக்கு தொழில் முதலீடுகள்
கா்நாடக மாநிலத்தில் ரூ. 46,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்களுடன் அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இந்திய உலோகங்கள் மையம் சாா்பில், 78 ஆம் ஆண்டு தொழில்நுட்ப கருத்தரங்கு பெங்களூரில் புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இக்கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதல்வா் சித்தராமையா பேசியதாவது:
தொழில்நுட்பம், தொழில் நிறுவனங்களின் அடையாள சின்னமாக பெங்களூரு விளங்குகிறது. இக்கருத்தரங்கில் பங்கேற்க 17,00 நிபுணா்கள் வருகை தந்துள்ளனா். உலோகங்கள், பொருள்களின் எதிா்காலத்தை தீா்மானிக்கும் வகையில் இக்கருத்தரங்கில் விவாதம் நடைபெறும்.
கா்நாடக அரசு பசுமையான எதிா்காலத்தை உருவாக்கும் நோக்கில் பசுமை தொழில்நுட்பங்களை கையாள்வதில் அதிக ஆா்வம் செலுத்துகிறது. இதனால் எதிா்காலத்தில் சூற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறையும்.
ரூ. 90,027 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக 669 முன்மொழிவுகள், மாநில ஒற்றைச் சாளர குழுவின் பரிசீலனைக்கு வந்தன. அவற்றில் ரூ. 46,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு 21 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கா்நாடக அரசு கையொப்பமிட்டுள்ளது. இதன்மூலம் 27,170 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றாா்.