சேலத்தில் மர அரவை ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்
சேலம் கிச்சிப்பாளையம் பிரதான சாலை பகுதியில் மர அரவை ஆலையில் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
சேலம் கிச்சிப்பாளையம் பாளையம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அதே பகுதியில் மர அரவை ஆலை மற்றும் பிளைவுட் கடை நடத்தி வருகிறார். வெளிமாநிலங்களுக்கு மரம் மற்றும் பிளைவுட்டுகளை தயாரித்து அனுப்பி வைத்து வருகிறார்
இந்த நிலையில், புதன்கிழமை இரவு வழக்கம்போல மர அரவை ஆலையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மர அரவை ஆலையில் இருந்து புகை வந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக சந்தோஷ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்து பார்த்தபோது ஆலை முழுவதும் புகை மூட்டத்துடன் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் ஆலையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்களும் எரிந்து நாசமானது.
இதையும் படிக்க |ரூ.70,890 சம்பளத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் யாரும் இல்லாததால் நல்லவாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை. இரவு நேரத்தில் இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.