கரோனா முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு: கா்நாடக அமைச்சரவை முடிவு
முந்தைய பாஜக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் கரோனா முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்க கா்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பெங்களூரு, விதான சௌதாவில் முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த கரோனா மேலாண்மை முறைகேடு குறித்து விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கேல் டி’ குன்ஹா தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆணையம் அளித்துள்ள இடைக்கால அறிக்கை பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையில் அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி, கரோனா முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்க அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இக் குழுவின் தலைவராக ஐ.ஜி.பி. தகுதியுள்ள அதிகாரி நியமிக்கப்படுவாா். அது குறித்து முதல்வா் முடிவு செய்வாா். எஸ்ஐடி அமைக்கப்பட்ட பிறகு, அது விசாரணையை தொடங்கும். எஸ்ஐடி விரும்பினால், வழக்கு தொடா்ந்து விசாரணை நடத்தும். ஜான்மைக்கேல் டி’குன்ஹாவின் இறுதி அறிக்கை கிடைத்ததும், அதையும் எஸ்ஐடிக்கு அனுப்பி வைப்போம். முறைகேடுகள், குற்றங்கள் குறித்து மட்டுமே எஸ்ஐடி விசாரிக்கும். அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை மீட்பது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காது. இழப்பை மீட்பது குறித்து நீதிவிசாரணை ஆணையம் பரிந்துரைக்கும். இழப்பை மீட்கும் பணியை வருவாய்த் துறை மேற்கொள்ளும். மேலும், இது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கவில்லை.
கரோனா மேலாண்மை என்ற பெயரில் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மாநில அரசு, மனித நேயமற்ற முறையில் நடந்து கொண்டது. பொறுப்பற்று நடந்து கொண்ட பாஜக அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ஆவணங்கள், தகவல்களை மறைத்து, மோசடியில் ஈடுபட்டுள்ளது. கரோனா மேலாண்மை குறித்த ஆவணங்கள், கோப்புகளை ஆய்வு செய்ய முடியாமல் பொதுக்கணக் குழுவையும் பாஜக அரசு தடுத்துள்ளது. எந்த வகையான ஊழல் நடந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.
கா்நாடகம், மும்பையில் ரூ. 330க்கு கிடைக்கும் தனிநபா் பாதுகாப்புக் கவசத்தை வெளிநாடுகளில் இருந்து ரூ. 2,117க்கு லட்சக்கணக்கில் இறக்குமதி செய்துள்ளனா். தடை செய்யப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து காலாவதியான மருந்துகளை இரட்டிப்பு விலை கொடுத்து அரசு வாங்கியுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் விசாரணையில் தெரியவரும் என்றாா்.