முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!
வீரா: `நம்பிக்கையை உண்டாக்கியவன், ஏன் இப்படி நடந்துக்கறான்னு...'- வருந்திய வைஷ்ணவி; காரணம் இதுதான்
ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'வீரா'. அருண், வைஷ்ணவி அருள்மொழி ஆகியோர் நடிப்பில் சமீப சில மாதங்களாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற தொடர் என்று சொல்லலாம்.
ஜீ தமிழ் சேனலில் சில ஆண்டுகளுக்கு முன் 'செம்பருத்தி' சீரியல் ஒளிபரப்பான போது, அதில் ஜோடியாக நடித்த கார்த்திக் - சபானா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த ஜோடிக்காகவே இந்தத் தொடரைப் பார்த்தவர்கள் ஏராளம். இந்தத் தொடர் மூலமே சன் டிவி சீரியல் ஒன்றை முதன் முதலாக வீழ்த்தி டி.ஆர்.பி.யில் முதலிடத்தைப் பிடித்தது ஜீ தமிழ்.
'செம்பருத்தி'க்குப் பிறகு இப்போது ஜீ தமிழ் சேனலில் ரொம்பவே பிரபலமடைந்திருக்கும் ஜோடியாக அருண்-வைஷ்ணவியைக் குறிப்பிட்டு வருகிறார்கள். கடந்த சில தினங்களாக சீரியலில் இந்த ஜோடி சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிய அளவில் வைரலான நிலையில், சில தினங்களுக்கு முன் நடந்த விருது விழா ஒன்றில் தன் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவம் என ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார் வைஷ்ணவி.
``அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே வாழ்ந்து வருகிறவள் நான். திடீர்னு ஒருத்தன் என் வாழ்க்கையில வந்தான். ஆரம்பத்தில் அவன் என் மேல காட்டிய அக்கறை என்னை ரொம்பவே உணர்ச்சி வயப்பட வச்சது. என் அம்மாவுக்கு அடுத்தபடியா என் மீது அன்பும் அக்கறையும் சொலுத்தற ஒரு ஜீவன்னு அவனை நம்பினேன். ரெண்டு பேருக்குமிடையிலான அந்த ரிலேஷன்ஷிப் நல்லாவே போய்கிட்டு இருந்துச்சு. ஆனா என்னன்னு தெரியல. திடீர்னு அவன் என்னை விட்டு விலகிப் போகிற மாதிரி தெரிஞ்சது. இப்ப அவனுக்கும் எனக்கும் தொடர்பே இல்ல. என் வாழ்க்கையில திடீர்னு வந்து ஒரு நம்பிக்கையை உண்டாக்கியவன், ஏன் இப்படி நடந்துக்கறான்னு என்னால இப்ப வரை புரிஞ்சுக்கவே முடியல. எங்கிருந்தாலும் அவன் நல்லா இருக்கட்டும்' எனக் கொஞ்சம் உணர்ச்சி ததும்பவே பேசியிருந்தார் .வைஷ்ணவியின் இந்தப் பேச்சை 'கன்டென்ட்டுக்காகப் பேசியது' எனச் சாதாரணமாகக் கடந்து போய் விட முடியாது என்கின்றனர், அவரைத் தெரிந்தவர்கள். என்ன நடந்தது என அவருக்கு நெருங்கிய நட்பு வட்டத்தில் விசாரித்தோம்.
''இன்னைக்கு வைஷ்ணவி நடிக்கிற சீரியல் ஹிட் ஆகி பேசப்படுதுதான். ஆனா சின்னத்திரையில் இந்த இடத்துக்கு அவங்க சுலபமா வந்துடல. முதல்ல சப்போர்ட்டிங் கேரக்டர்கள்லதான் நடிச்சிட்டிருந்தாங்க. ஒரு பிரைம் டைம் சீரியல்ல ஹீரோயினா தலை காட்டறதுக்குள் அவங்க பட்ட கஷ்டங்கள் அவங்களை நல்லா தெரிஞ்சவங்களுக்கு மட்டுமே தெரியும்.
இப்படி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த சூழல்லதான் சில வருஷங்களுக்கு முன்னாடி அவங்களுக்கு ஒரு நண்பர் அறிமுகமானார். முதல்ல ரெண்டு பேருக்குமிடையில் நட்பு மட்டுமே இருந்திருக்கு. ஆனா போகப்போக அந்த நட்பு காதலாகியிருக்கு. அம்மாவும் பொண்ணுமா தனியா இருந்த வைஷ்ணவி குடும்பத்துக்குத் தேவைப்பட்ட உதவிகளைச் செய்து வந்தார் அந்த நண்பர்.
இந்தச் சூழல்ல 'வீரா' சீரியலில் வைஷ்ணவிக்கும் அவர் கூட நடிக்கும் ஹீரோவுக்கும் இடையில் நெருக்கமான காட்சிகள் ஷூட் செய்யப்பட்டிருக்கு. சீரியலின் இந்தக் காட்சிகளை வைத்து அந்த ஹீரோவுக்கும் வைஷ்ணவிக்கும் காதல் அது இதுனு வெளியில ஒரு பேச்சு கிளம்ப, அது அந்த நண்பர் கொஞ்சம் அப்செட் ஆகியிருக்கார். 'இது சீரியல், அதனால இதை ஒரு விஷயமா எடுத்துக்கத் தேவையில்லை'ன்னு வைஷ்ணவி சொன்னதை அவரால புரிஞ்சுக்க முடியலை. அதனால ரெண்டு பேருக்குமிடையில் கருத்து வேறுபாடு உருவாகி ஒருகட்டத்துல பேச்சுவார்த்தையே நின்னு போச்சு. அந்த வருத்தத்தையே விருது மேடையில் பேசியிருக்கார்' என்றனர் அவர்கள். வைஷ்ணவியுடன் நடிக்கும் சக ஆர்ட்டிஸ்டுகள் சிலரோ, 'அந்தப் பையன் இவங்க மேல ரொம்பவே அக்கறையாத்தான் இருந்தான். ஆனா இவங்களோட நடவடிக்கைகள்தான் திடீர்னு மாறிடுச்சு. டிவியில இப்பெல்லாம் காதலும் பிரேக் அப்பும் ரொம்பவே சாதாரண்மாகிடுச்சு' என்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...