கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியிருப்பது நிர்வாக சீர்குலைவை ஏற்படு...
BB Tamil 8 Day 44: `எனக்கும் லவ் தான்' செயற்கையான லவ் டிராக்; சாச்சனா அலப்பறையால் அலறும் பெண்கள் அணி
பிக் பாஸ் சீசன் எட்டாவதிற்கான புரமோக்கள் வெளியாகும் போது விஜய் சேதுபதி காதில் கை வைத்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகியது. அவர் ஏதோ ஸ்டைலாக போஸ் தருகிறார் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
‘அப்போ புரியல.. இப்போ புரியுது’. இந்த சீசனில் ‘கங்குவா’ ஹைடெஸிபல் இரைச்சல்கள் நிறைய வரும். உங்கள் காதுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்பதைத்தான் விசே குறியீடாக அப்போதே காட்டியிருக்கிறார் போல. இந்த எபிசோடிலும் அப்படியொரு சந்தைக்கடை இரைச்சல். அத்தனை லேயர்களையும் ஒலிக்க விட்டு நம் காதுகளை பஞ்சராக்கி பிக் பாஸ் வேடிக்கை பார்த்த குறும்பு இருக்கிறதே?! அநியாயம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 44
தர்ஷிகாவும் விஷாலும் ‘ஸோ கால்ட்’ லவ் டிராக் பற்றி நேரடியாகப் பேசிக் கொண்டது நன்று. இருவருமே வார்த்தைகளில் மாட்டிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாகப் பேசினார்கள். “ஒரு மாதிரி ஃபீல் வருது. அது வெளிய தெரியற மாதிரியா நான் நடந்துக்கறேன்?” என்கிற மாதிரி தர்ஷிகா ஆச்சரியப்பட்டார். (அவ்ளோ சத்தமாவா கேக்குது?!) “நான் உனக்கு நல்ல பிரெண்டா இருப்பேன். மத்தவங்க என்ன வேணா நெனக்கட்டும். எதுவா இருந்தாலும் என் கிட்ட நேரா பேசு’என்று விஷாலும் மையமாகப் பேசினார்.
இந்த சீசனில் உத்தரவாதமான ‘லவ் டிராக்’ என்று எதுவும் இதுவரை ஏற்படவில்லை. அதையாவது ஏற்படுத்தி நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்துவது. அதன் மூலம் தன்னுடைய இருப்பை பலப்படுத்திக் கொள்வது என்று சிலர் முயல்கிறார்கள். ஆனால் இது செயற்கைத்தனமாக இருக்கிறது. இயல்பாக அமையவில்லை. (கவின் - லொஸ்லியா நினைவு வருகிறது)
மார்னிங் ஆக்டிவிட்டி. பெண்கள் லிவிங் ரூமிற்குள் வருவதற்காக முத்து டாஸ்க் தந்தார். ‘திருக்குறள் சொல்ல வேண்டும்’ என்றதும் ‘அய்யோ’ என்று பயந்தார் சவுந்தர்யா. நல்லவேளை, திருக்குறளா.. என்ன டிஷ் அது?’ என்று கேட்காத வரைக்கும் மகிழ்ச்சி. ‘அன்ஷிதா சொல்வதற்கு சிரமப்படுவார்’ என்று மஞ்சரி ஆட்சேபித்தாலும் தத்துப்பித்தென்று அவர் சரியாக சொல்லி விட்டார்.
செயற்கையாக உருவாகும் ‘லவ் டிராக்’
‘இந்த கேமில் என்னுடைய உழைப்பைச் செலுத்தியிருக்கிறேன்’ என்கிற தலைப்பில் ஒவ்வொருவரும் பேச வேண்டும். ஆதரிப்போர் கை தூக்கலாம். ஆதரிக்காதோர் சும்மா இருக்கலாம். ‘செல்ஃப் மோட்டிவேஷன்லதான் நகர்ந்துட்டு இருக்கேன்’ என்று தர்ஷிகா சொல்ல மெஜாரிட்டியான ஆதரவு கிடைத்தது. மஞ்சரிக்கு முக்கால் சதவிகித ஆதரவு. ‘இங்க இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் நானா செதுக்கினது’ என்பது போல் முத்து பேச அனைவருமே கைதூக்கினார்கள். ராணவ் வந்து பேசியது போது “சரி.. போனாப் போகுது’ என்று நாலைந்து பேர் கைதூக்கினார்கள்.
பிரின்சிபல் மேடம் Vs VP சார், விஷால் Vs தர்ஷிகா, ‘லவ் டிராக்’கெல்லாம் உருவாகும் போது, ‘நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா’ என்கிற மோடில் இருக்கிறார் ராணவ். எப்படியாவது ஒரு காதலைச் சம்பாதித்து அந்த வீட்டில் தன் இருப்பை நீட்டிக்க நினைக்கிறார் போல. எனவே பவித்ராவை டார்கெட் செய்து காலிபிளவர் தண்டை பொக்கே போல் மண்டியிட்டு தர, பவித்ராவும் அரைமனதாக அதை வாங்கிக் கொள்கிறார். ஏனெனில் ராணவ் ஒரு டம்மி பீஸாக அந்த வீட்டில் மதிக்கப்படுபவர். எனவேதான் அந்தத் தயக்கம். முன்பொரு முறை விஷால் இதே மாதிரி பொக்கே தந்த போது வாய்நிறைய சிரிப்புடன் வாங்கிக் கொண்டவர்தான் பவித்ரா.
‘லவ் டிராக்’ மூலம் காலம் தள்ள முடியுமா என்கிற எண்ணவோட்டம் பவித்ராவிற்குள்ளும் ஒருவேளை இருக்கலாம். எனவே ராணவ்வின் செய்கையை அவர் பலமாகத் தடுக்கவில்லை. ‘சரி.. டோக்கன் போட்டு வைப்போம்’ என்கிற மாதிரி அரைமனதாக மட்டுமே ஏற்றுக் கொள்கிறார். ஆனால் பிறகு விஷால் கொளுத்திப் போட்ட விஷயம் பவித்ராவிற்கு எரிச்சலை ஏற்படுத்தி விட்டது. இருவரையும் இணைத்து விஷால் ஒரு பாட்டுப்பாட அதனால் எரிச்சலான பவித்ரா அதைக் கண்டித்து விட்டு ராணவ்வின் ‘காலி பிளவர்’ பொக்கேவை தூக்கி குப்பையில் போட்டு விட்டு வந்தார். ஒருவேளை ‘பொசசிவ்’ காரணமாக விஷாலும் இப்படி உள்ளே புகுந்து ஆட்டையைக் கலைத்தாரோ?!
“உன்னைப் பார்த்து பயமா இருக்கு’ - சாச்சனாவின் அலப்பறையினால் அலறும் பெண்கள் அணி
டாஸ்க் செய்து விட்டு கிச்சன் டீமிற்குள் சென்ற ஜெப்ரி, மீண்டும் வெளியே வந்து குளித்து விட்டு உள்ளே செல்லும் போது அனுமதி கேட்கவில்லை. இதைப் பார்த்து விட்டு சாச்சனா ஆட்சேபித்தார். இதன் பொறுப்பாளராக இருக்கும் வர்ஷினி சரியாக கவனிக்கவில்லை என்று புகார் தெரிவிக்க ஒரு மினி பஞ்சாயத்து நடந்தது. ‘ஏற்கெனவே அனுமதி வாங்கிய பிறகு மீண்டும் ஏன்?” என்பது முத்துவின் வாதம். ‘தனிப்பட்ட விஷயத்திற்காக வெளியே சென்றால் மீண்டும் வருவதற்கு அனுமதி வாங்க வேண்டும்’ என்பது பெண்களின் தரப்பு நியாயம். சாச்சனாவின் வாதத்தில் கேப்டன் மஞ்சரி உள்ளே புகுந்ததால் சாச்சனா காண்டானார் என்பது சில மணி நேரங்கள் கழித்து புரிந்தது.
கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா என்கிற ஆதிகாலத்து விவாதத்தைப் போல சாச்சனா முட்டை சாப்பிடுவாரா, இல்லையா என்பது இந்த சீசனின் முக்கியமான கேள்வியாக மாறியிருக்கிறது. தன்னை ‘Vegan’ என்று அறிவித்துக் கொண்ட சாச்சனா, பிறகு புரோட்டின் தேவைக்காக முட்டை சாப்பிடத் துவங்கியிருக்கிறார்.
குழம்பில் கத்தரிக்காய், முட்டையைப் போட்டு சமைத்த கிச்சன் டீம், திடீரென சாச்சனாவின் நினைவு வந்து ‘அய்யோ.. இந்தப் பொண்ணு.. கீச்கீச்சென்று கத்துமே’ என்று பயந்து ‘உனக்கு என்னம்மா பிடிக்கும்?” என்று கேட்க ‘கத்தரிக்கா போட்டீங்களா.. அப்ப எனக்கு எதுவும் வேணாம்’ என்று சாச்சனா அடம்பிடிக்க “உனக்குப் பிடிச்சத செஞ்சு தரேன்” என்று அன்ஷிதா சொன்னது நல்ல விஷயம். சாச்சனா வயதில் இளையவர் என்பதால் அவரைக் கண்டிக்கவோ, எதிர்க்கவோ பலரும் தயங்குகிறார்கள். பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்து விடுவோம் என்கிற பயமாக இருக்கலாம்.
நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கின் முதல் சுற்று ஆரம்பித்தது. ஒரு கண்ணாடிக் கோப்பையை தலைகீழாகக் கவிழ்த்து ஒரு கோலியை அதற்கள் அழுத்திப் பிடித்து கோப்பையை கடகடவென்று சுழற்றுவதின் மூலம் கோலியை உள்ளே தங்கச் செய்ய வேண்டும். அப்படியே நடந்து வந்து கோலியை எதிரேயுள்ள தொட்டியில் போட்டால் ஒரு பாயிண்ட். எந்த அணி அதிக பாயிண்ட் எடுக்கிறதோ, அதுவே வெற்றி.
இந்த விளையாட்டை ஆண்கள் அணி திறமையாகச் செய்தது. நிறைய உருட்டிப் பழக்கம் போல. தோற்று விடுவோம் என்கிற பயம் காரணமாகவோ என்னவோ, பெண்கள் அணியினர் கோல்மால் செய்யத் துவங்கினார்கள். கோப்பையை சாய்த்தபடி பிடித்து வந்த தர்ஷிகா மற்றும் மஞ்சரியை பிக் பாஸ் எச்சரித்தார். இந்த முதல் சுற்றில் ஆண்கள் அணி வெற்றி பெற்றது.
தீபக்கின் டாமினேஷன் பற்றி சிவக்குமார் மீண்டும் புலம்பத் துவங்கி வி்ட்டார். “சுர்ருன்னு ஏறுது.. ரொம்ப அதிகாரம் பண்றார். அவர் கிட்டயே கூப்பிட்டு சொல்லிட்டேன்” என்று ரஞ்சித் மற்றும் சத்யாவிடம் அவர் சொல்ல “இங்க எல்லோருமே ஸ்கிரீ்ன் ஸ்பேஸ் எடுக்க அலைமோதறாங்க” என்றார் ரஞ்சித்.
ராணவ் செய்யும் கலாட்டாவால் கடுப்பாகும் பெண்கள் அணி
‘வந்த புதுசுல பவித்ரா எனக்கு சாக்லேட்லாம் கொடுத்தாங்க’ என்று ரயானிடம் புளகாங்கிதமாக சொல்லிக் கொண்டிருந்தார் ராணவ். ‘லவ் டிராக்’ என்பதற்குப் பதிலாக ‘லவ் டாஸ்க்’ என்று சொல்லி அதையே ஒரு விளையாட்டாக்கி விட்டார். என்றாலும் அந்தப் பெயர் பொருத்தமாகத்தான் இருக்கிறது. பக்கத்தில் படுத்திருந்த விஷால் கண் அயர்ந்து விட, நாய் குரைத்தது “யார் துங்கினது?’ என்று மஞ்சரி வந்து விசாரிக்க “யாருப்பா தூங்கினது.. நாங்க பார்க்கலையே?” என்று மூன்று பேரும் சாதித்தார்கள்.
“அப்ப மூணு பேருமே டாஸ்க் பண்ணுங்க. இனிமே தூங்க மாட்டேன்னு சொல்லிட்டே பண்ணுங்க” என்று டாஸ்க் கொடுத்தார் மஞ்சரி. ‘கரக் க்வாக்.. கரக்.. க்வாக்’ என்று கத்திக் கொண்டே தவ்விக் குதித்த விஷால் ‘தவளை மொழியில் தூங்க மாட்டேன்றதைத்தான் சொல்றேன்’ என்றது நல்ல குறும்பு. இந்த டாஸ்க்கை சமர்த்தாக செய்து முடித்தது ரயான். ஆனால் விஷாலும் ராணவ்வும் அராத்து வேலைகள் செய்ததால் மஞ்சரி டென்ஷன் ஆனார். அதிலும் ராணவ் மீது நிறைய காண்டானார். “என்னை மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க?” என்று ஆதங்கப்பட்டார் ராணவ். விஷாலிடம் காட்டும் பிரியத்தை தன்னிடம் ஏன் காட்டமாட்டேன்கிறார்கள் என்கிற பொறாமை ராணவ்விடம் இருப்பதைப் போல் தெரிகிறது.
பெண்கள் அறையில் ஒரு விவாதம். சபையைக் கூட்டிய சாச்சனா “எனக்கு 21 வயது ஆகுது. பல சமயங்கள்ல மெச்சூரிட்டியாதான் நடந்துக்கறேன். என் கிட்ட என்ன தப்பு இருக்கு. சொல்லுங்க.. மாத்திக்கறேன்” என்கிற கேள்வியைப் பொதுவில் வைக்க “உன் கிட்ட பேசவே பயமா இருக்கு. நீ சின்னப் பொண்ணுன்னுறது மைண்ட்ல வந்துடுது.. எல்லாத்துக்கும் அடம் பிடிக்கறே” என்று மற்ற பெண்கள் பதில் சொல்ல, அருகில் ஜென் மோடில் அமர்ந்திருந்த சத்யா ‘நல்லா வந்து மாட்டிக்கிண்டா இங்க’ என்கிற மாதிரி இருந்தார்.
‘பவி’யை எப்படியாவது இம்ப்ரஸ் செய்து விட வேண்டும் என்பதற்காக ‘பாவி’யாக முடிவு செய்து விட்டார் ராணவ். மெலிதாக இருமிய பவித்ராவிற்கு சுடுதண்ணீர் கொண்டு வருகிறேன் என்று தீவைத் தாண்டிய அனுமார் மாதிரி அவர் பெண்கள் அணியின் இடத்தில் தாவிக் குதித்தார். “உன்னோட காதல் உண்மைன்னா ரிஸ்க் எடுத்து குதிச்சுப் போகணும்” என்று அருண் ஜாலியாக கோத்து விட அதை சீரியஸாக எடுத்துக் கொண்டார் ராணவ்.
“ஆங்கிலத்தில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை mocking’ - அருண்
இதுவரை விளையாட்டாக சென்று கொண்டிருந்த விஷயம், மஞ்சரி வந்தவுடன் சீரியஸாகி விட்டது. திடீரென கேப்டன் அவதாரம் எடுத்த மஞ்சரி “நீ ஏன் தாவிக் குதிச்சே.. இந்தக் கோட்டை சீரியஸா எடுத்துக்க மாட்டியா.. டாஸ்க் பண்ணு” என்று கறார்த்தனம் காட்ட “என்னை மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க. நான் ஃபன் டாஸ்க் பண்ணிட்டேன்’ என்று மல்லுக்கட்டினார் ராணவ்.
இந்த விவாதத்திற்குள் அருணும் என்ட்ரியாக, இன்னமும் சூடு பிடித்தது. “ஆங்கிலத்தில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை mocking. இனிமே அதை என் கிட்ட சொல்லாதீங்க” என்று மஞ்சரியிடம் அருண் கடுமையாக ஆட்சேபிக்க ஒரே கூச்சலும் குழப்பமும். காதைப் பொத்திக் கொண்டிருந்த சவுந்தர்யாவும் ஒரு கட்டத்தில் விழித்துக் கொண்டு ‘சந்திரமுகி’ அவதாரம் எடுக்க சூழல் ரணகளமாகியது. ஒரு அறையில் பல விவாதங்கள் நடந்தாலும் எது தேவையோ அதை மட்டுமே பிரித்து பார்வையாளர்களுக்குத் தருவது பிக் பாஸ் டீமின் வழக்கம். இந்த முறை அனைத்து லேயர்களையும் ஒலிக்க விட்டு ‘என்சாய்’ என்று கங்குவா எஃபெக்ட்டை தந்து பார்வையாளர்களின் காதுகளை கலவரமாக்கி விட்டார்கள்.
இந்த வார வீக்லி டாஸ்க் ‘ராஜா - ராணி’ என்கிற அரதப்பழசான விஷயம் என்பது தெரிந்தது. அதற்கான அரங்கப் பொருட்கள் வந்து சேர்ந்திருந்தன. ‘ஐ சிம்மாசனம். எவ்ள பெரிய கத்தி.. செமயா இருக்குல்ல’ என்றெல்லாம் மியூசியத்தை சுற்றிப் பார்ப்பது போல் மக்கள் சுற்றிப் பார்த்தார்கள். அப்போதே பலருக்கும் தான்தான் ராஜா என்கிற கனவு உள்ளே ஓடியிருக்கும்.
பறிக்கப்பட்ட கேப்டனின் பேட்ஜ் - எதிர்ப்பைச் சந்தித்த ஆர்வக்கோளாறு சாச்சனா
கடந்த வாரத்தில் கேப்டனாக இருந்த அருணின் அங்கியில் ஐந்து கயிறுகளை கட்டி விளையாடிய பிக் பாஸ், இந்த முறை மஞ்சரிக்கு மூன்று பேட்ஜ்களை தந்தார். கேப்டன் சரியாக செயல்படவில்லை என்று யாருக்காவது தோன்றினால் தகுந்த காரணம் சொல்லி ஒரு பேட்ஜை கழட்ட வைக்கலாம். இப்படி மூன்று பேட்ஜ்களையும் அவர் இழந்தால் கேப்டன் பதவி பறிபோகும்.
சுடச்சுட ஒரு பேட்ஜை பறிக்க முடிவு செய்த முத்து ‘அருண் - mocking’ காரணத்தைச் சொல்லி ‘இது கேப்டன் பதவிக்கான அழகல்ல’ என்று சுட்டிக் காட்டி ஒரு பேட்ஜை பறித்தார். ‘நான் மட்டும் சும்மாவா?’ என்று எழுந்த சாச்சனா, ‘ராணவ்விடம் மஞ்சரி பாரபட்சமாக நடந்து கொண்டார்’ என்றொரு காரணத்தையும் ஜெப்ரி டாஸ்க் விஷயமாக தான் பேசிக் கொண்டிருக்கும் போது மஞ்சரி உள்ளே புகுந்து கலைத்தார்’ என்று இன்னொரு காரணத்தையும் சொன்னார்.
ஒரே சமயத்தில் இரண்டு பேட்ஜ் என்றால் அனுதாபம் ஏற்படும். பெண்கள் அணியில் அது ஏற்பட்டது. முதலில் சத்யா இதை ஆட்சேபிக்க மற்ற பெண்களும் இணைந்து கொண்டார்கள். வழக்கம் போல் அடம்பிடித்து பார்த்த சாச்சனா, பிறகு நிறைய எதிர்ப்பைப் பார்த்து வந்து அமர்ந்து விட்டார். ‘அமைதி.. அமைதி’... என்று கெத்தாக எழுந்த ஜெப்ரி “இப்பத்தான் கேப்டன் பதவிக்கு வந்திருக்காங்க. ஒரு வாய்ப்பு தந்து பார்க்கணும். அதுக்குள்ள எல்லாத்தையும் பிடுங்கணுமா.. அப்ப ஏன் அவங்களை பெஸ்ட் ஃபர்பார்மரா தேர்வு செய்தீங்க?” என்றெல்லாம் மஞ்சரிக்கு ஆதரவாகப் பேச “ஹே.. சூப்பர்பா.. இப்படி நீ பேசி நாங்க பார்த்ததே இல்ல” என்று பெண்கள் அணி கைத்தட்டியது.
‘வந்தவுடனேயே பதவி்க்கு வேட்டு வைக்கறாங்களே’ என்று மஞ்சரி கண்கலங்க, ‘கேப்டன் பதவின்றது சாதாரணமானது கிடையாது’ என்று தீபக் ஆதரவு தர “என்னை இனிமேல் mocking-ன்ற வார்த்தையை வெச்சு யாரும் சொல்லாதீங்க. காண்டாவுது” என்றார் அருண்.
“நீ ஒரு பாயிண்ட்டை எடுத்து வெச்சா அது வேலி்ட்டா இருக்கணும். இல்லாட்டி சொல்லாத” என்று பிறகு சாச்சனாவிற்கு தர்ஷிகா தந்த அட்வைஸ் சிறப்பு. பவித்ராவிடம் வந்து ராணவ் ‘ஸாரி’ கேட்க, “மத்தவங்க கீ கொடுக்கற பொம்மையா இருக்காதீங்க” என்று அட்வைஸ் செய்தார் பவித்ரா. அருண் உசுப்பேற்றியதால்தான் ராணவ் குதித்தார் என்பது பலரின் அபிப்ராயமாக இருக்கிறது.
‘மௌனராகம் கார்த்திக்கின்னு மனசுல நெனச்சிக்கிட்டு நீ ஒண்ணு பண்ற தெரியுமா.. அது செமயா இரிடேட் ஆகுது ப்ரோ” என்று சாச்சனா கூட ராணவ்விற்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தார். “ஏண்டா. நான் குதின்னு சொன்னா குதிச்சிடுவியா?” என்று அருணும் இணைந்து கொண்டார்.
இந்த வாரத்தின் வீக்லி டாஸ்க் - ராஜா ராணி
‘ஒரு ஊர்ல.. ஒரு ராஜா ராணி இருப்பாங்களாம்.. ஓ.. இங்க ரெண்டு ஊரு இருக்குல்ல.. அப்படின்னா ரெண்டு ஊர்ல ரெண்டு ராஜா ராணி இருப்பாங்களாம்… இரண்டு நாடுகளுக்கும் இடையே பகை இருக்குது. எந்த நாடு ஜெயிச்சு அரியணையை கைப்பற்றதுன்னு பார்ப்போம்’ என்று கங்குவா படத்தின் கதையை டிரெண்டிங்காக வைத்து வீக்லி டாஸ்க் ஆரம்பித்தார் பிக் பாஸ்.
ஒவ்வொரு அணியிலும் ராஜா, ராணி, தளபதி, ராஜகுரு, சமையல் ஆள், பணியாள், பிரஜைகள் என்று இருப்பார்கள். ஒவ்வொரு கேரக்ட்ரையும் பிக் பாஸே அறிவித்தார். தனக்கு ராணி வேடம் கிடைக்கும் என்கிற கற்பனையில் உட்கார்ந்திருந்த சவுந்தர்யாவிற்கு ‘ராணியின் பணிப்பெண்’ என்கிற அறிவிப்பு வந்ததும் சபை சிரித்தது. ஆண்கள் அணியில் ராஜாவாக ராணவ். இது கூட பரவாயில்லை. பெண்கள் அணியில் ராணியாக சாச்சனாவை அறிவித்து பயங்கர டிவிஸ்ட் தந்தார் பிக் பாஸ்.
வர்ஷினிக்கு பிரின்சிபல் ரோல் கிடைத்தது போல் இது நல்ல வாய்ப்பு. யார் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
‘தங்களின் நாட்டுக்கு என்ன பெயர் வைப்பது’ என்கிற விவாதம் ஆண்கள் அணியில் ஆரம்பித்தது. டாஸ்க் ஆரம்பிப்பதற்கு முன்பே உரைநடைத் தமிழில் பேசி வார்ம் - அப் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தன்னுடைய யோசனை ஒன்றை சொல்ல வந்தார் ரஞ்சித். ‘ஓரமா இருங்க சித்தப்பா’ என்பது மாதிரி அவரை ஒதுக்கி விட்டு மற்றவர்களே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, கோபம் கொண்ட ரஞ்சித் “டேய்.. நிறுத்துங்கடா.. என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க.. சும்மா.. நொச.. நொச..ன்னிட்டு. எப்பத்தாண்டா என்னைப் பேச விடுவீங்க?” என்று பொங்கியவுடன் ‘அடடே.. ரஞ்சித் அண்ணனுக்கு கூட கோபம் வருதுடா” என்று அதற்கும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
“நூறு பேரு கூட யோசிங்க.. ஆனா வெக்கற பேரு.. நச்சுன்னு கெத்தா இருக்கணும். பல கோடி பேரு பார்க்க நிகழ்ச்சி இது’ என்ற ரஞ்சித் ‘வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்கிற செய்தியைச் சொல்லாமல் சொன்னார். எதிர் அணியில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஒற்றராக நியமிக்க வேண்டும். அவர் இந்தப் பதவியை மறுக்க முடியாது என்பது விதி.
ஆண்கள் அணி கூடிப் பேசி ‘ஜாக்குலினை’ ஒற்றராக நியமிக்க முடிவு செய்தது. ஆனால் மண்டையை மறைத்தவர்கள், கொண்டையை மறைக்கத் தவறி விட்டார்கள். அனைவரையும் வைத்துக் கொண்டே இந்த விவாதம் நடந்தது. எனில் இவர்களின் அணியில் இருந்து எதிர்அணிக்கு ஒற்றராக செல்பவருக்கு இந்த விஷயம் தெரிந்து விடும்தானே?! இதைத் தாமதமாக உணர்ந்த ஆண்கள் அணி ‘சரி.. பார்த்துக்கலாம்’ என்று டீலில் விட்டார்கள். அரசர் அணியைச் சேர்ந்த ராஜகுருவான ரயான் (ஆமாம்.. ஷாக் ஆகக்கூடாது!) ஜாக்குலினைச் சந்தித்து தங்களின் முடிவைச் சொன்னார். பெண்கள் அணி ஜெப்ரியை ஒற்றனாக தோ்ந்தெடுக்கலாம் என்று தோன்றுகிறது.
இந்த ராஜா - ராணி டாஸ்க்காவது சுவாரசியமாக இருக்குமா என்று பார்ப்போம். ஆறடிக்கு மேல் வளர்ந்திருக்கும் ராணவ் ராஜாவாம். கீச்கீச்சென்று கத்திக் கொண்டிருக்கும் சாச்சனா ராணியாம். ஆரம்பமே காமெடியாகத்தான் இருக்கிறது!