இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் - அமெரிக்காவில் அதானி மீது முறைகேடு ப...
"எங்கள் முதலமைச்சருக்கு மதுவில் வரும் வருமானம் தேவையில்லை... ஆனால்..." - சொல்கிறார் ரகுபதி
புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷ சாராயம் சம்பவம் வருத்தத்துக்குரியது. கண்டனத்துக்குரியது.. இந்த சம்பவம் நடைபெற்றவுடன் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காக்க உரிய முறையில் சிகிச்சை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டார். ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு, அந்த விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசுடைய சி.பி.சி.ஐ.டி போலீஸார் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி யார் யாரெல்லாம் இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று கண்டுபிடித்து அந்தப் பணியை சிறப்பாகச் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் மணிப்பூருக்கு நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உயர்நீதிமன்ற தற்போதைய நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜியும் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது ஆச்சிரியத்திற்குரிய ஒன்றாக உள்ளது. நீதிமன்றத்தில் வழங்கக்கூடிய தீர்ப்பை விமர்சிக்கக்கூடிய உரிமை கிடையாது. தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை எந்த அரசும் எடுக்காத நடவடிக்கை. சி.பி.ஐ என்பது சி.பி.சி.ஐ.டி போன்ற காவல் அதிகாரிகளைக் கொண்ட அமைப்புதான். அது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தக்கூடிய நிலைமையை இது போன்ற தீர்ப்புகள் உருவாக்குகின்ற சூழ்நிலை அமைத்து விடுகிறது. சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னால் சி.பி.சி.ஐ.டி-யில் உள்ள தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாண்டுக்கு இணையான போலீஸ் என்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாராட்டப்படுகின்ற காவல்துறை தான் தமிழ்நாடு காவல்துறை. எந்த வழக்கையும் சிறந்த முறையில் கையாளக்கூடிய ஆற்றல்மிக்கவர்கள் தமிழ்நாடு காவல்துறையினர்.
அதேபோல், கள்ளக்குறிச்சி வழக்கையும் மிகச் சிறப்பாக அவர்கள் கையாண்டு வருகின்றனர். அதற்குரிய நடவடிக்கைகள் படிப்படியாக உரிய காலகட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து நல்ல முடிவெடுப்பார். உயர்நீதிமன்றம் சொல்லி உள்ளபோது அதற்கு தடை கேட்க முடியாது. நாங்கள் இந்த வழக்கில் திறமையாக செயல்பட்டுள்ளோம் என்றுதான் சொல்கின்றோம். சி.பி.ஐ ஆரம்பத்திலிருந்து விசாரிக்க ஆரம்பித்தால் காலதாமதம் தான் ஏற்படுமே தவிர துரிதமான பலன் நிச்சயம் கிடைக்காது என்பது எங்கள் கருத்து. நிச்சயமாக தி.மு.க-விற்கு இந்த விவகாரம் பின்னடைவை ஏற்படுத்தாது. நாங்கள் இந்த விவகாரத்தில் எடுத்திருக்கிற நடவடிக்கையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் திருப்தியில் உள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தான் சில அரசியல் கட்சியினர் இந்த வழக்கைத் தொடர்ந்து உள்ளனர். அதைத்தவிர வேறொன்றுமில்லை. நிச்சயம் வரும் 2026 -ம் வருட சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தாது.
தி.மு.க நிர்வாகிகள் ஒருவருக்காவது இதில் தொடர்பு இருந்திருந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கட்சியை விட்டு நீக்கி விடுவார். யாரையும் அவர் மன்னிக்க மாட்டார். எல்லாவிதமான வாதங்களையும் நீதிமன்றத்தில் நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். அது சரியா, தவறா என்று உறுதி செய்வது நீதிபதி கையில் தான் உள்ளது.
ஆனால், மேல் முறையீடு செய்ய அனைத்து உரிமையும் உண்டு. எத்தனையோ வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பும் மாற்றப்படக்கூடிய தீர்ப்பு தான். நாங்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று சிறந்த முறையில் வாதிட்டு நிச்சயம் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு உள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணை சரி என்று எங்களால் நிரூபிக்க முடியும். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எந்தவித பின்னடைவும் அரசுக்கு இல்லை சில அரசியல் கட்சியினர் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட யாரும் வழக்கு கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க அரசியலாக தான் பார்க்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எந்த மர்மமும் இல்லை. அப்படி மர்மம் இருந்தால் தானே அதன் முடிச்சுகளை அவிழ்க்க முடியும். மதுவிலக்கை கொண்டு வருவதற்கு தயார். எங்கள் முதலமைச்சருக்கு மதுவில் வரும் வருமானம் தேவையில்லை. நாங்கள் மதுவிலக்கு கொண்டு வரத் தயாராக இருக்கிறோம். யாராவது கட்டுப்பட்டு இருப்பார்களா?. அண்டை மாநிலங்களுக்கு சென்று மது வாங்கி குடிப்பார்கள் தான். இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு வந்தால் தான் பூரண மதுவிலக்கு சாத்தியம். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள் தேவையில்லை என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு அதை கடிதம் மூலமாக நாங்கள் தெரிவித்துவிட்டோம். " என்றார்.