அரசமைப்புச்சட்டத்துக்கு எதிரானவா்கள் அதை மாற்ற நினைக்கிறாா்கள்: முதல்வா் சித்தராமையா
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவா்கள் அதை மாற்ற நினைக்கிறாா்கள் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் 75-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அரசமைப்புச் சட்டத்தை எதிா்ப்பவா்கள் அதனை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறாா்கள். உடுப்பியில் அண்மையில் செய்தியாளா்களிடம் பேசிய பெஜாவா் மடத்தின் பீடாதிபதி விஸ்வபிரசன்ன தீா்த்த சுவாமிகள், அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டிய அவசியமுள்ளது என்று கூறியுள்ளாா். மாறாக, அரசமைப்புச் சட்டத்தை மாற்றக்கூடாது என்பது எங்கள் நிலைப்பாடாகும்.
அரசமைப்புச் சட்டத்துக்கு இதுவரை 106 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் 75-ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
உலக அளவில் எழுதப்பட்ட மிக நீளமான அரசமைப்புச் சட்டம் இந்தியாவுடையதாக தான் இருக்கும். அரசமைப்புச் சட்டத்தின் வழியே நடத்தப்பட்ட ஆட்சி 75 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
உள்ளாட்சி அமைப்பு அல்லது மாநில அரசு அல்லது மத்திய அரசு எதுவாக இருந்தாலும், அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகள், நோக்கங்களுக்கு இணங்கி தான் ஆட்சி நடத்த முடியும்.
கா்நாடகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மாணவா்கள் கட்டாயமாக படிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை, அதன் நோக்கங்களை ஒவ்வொரு குழந்தையும் புரிந்துகொண்டு, அதன் வழி செயல்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள உரிமைகள் மற்றும் கடமைகளை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்.
அதன் காரணமாகவே, அரசமைப்புச் சட்ட தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்திய மக்களுக்கு இது ஒரு புனிதமான நாள் என்றாா்.