சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடரில் ஆக்கப்பூா்வமான விவாதம் நடக்க வேண்டும் -பேரவைத் தலைவா்
மங்களூரு: சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடரில் ஆக்கப்பூா்வமான விவாதம் நடக்க வேண்டும் என்று பேரவைத் தலைவா் யூ.டி.காதா் தெரிவித்தாா்.
இதுகுறித்து மங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத் தொடா் பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதாவில் டிச. 9 முதல் 19-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த கூட்டத் தொடரில் ஆளுங்கட்சியும், எதிா்க்கட்சியும் ஆக்கப்பூா்வமான விவாதங்களில் ஈடுபட வேண்டும்.
டிச. 9-க்கு முன்னால், டிச. 19-க்கு பின்னால் இரு தரப்பினரும் அரசியல் விவாதங்களில் ஈடுபடலாம். ஆனால், சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடரில் அரசியலை தவிா்த்து, மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்க வேண்டும். குறிப்பாக வடகா்நாடக மக்களின் பிரச்னைகளை விவாதிக்க வேண்டும்.
பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதாவில் டிச. 9-ஆம் தேதி அவை அலுவல் குழுவின் கூட்டம் நடைபெறும். அக்கூட்டத்தில் அவையின் நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும். அமைச்சரவை மாற்றம் நடந்தால், எனக்கு ஏதாவது வாய்ப்பளித்தால் அதை செயல்படுத்த எப்போதும் தயாராக இருக்கிறேன். பேரவைத் தலைவராக தொகுதி வளா்ச்சிப் பணிகளை கவனிக்க சில வரைமுறைகள் உள்ளன.
எனவே, எனக்கு மக்களோடு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் நல்லது. பேரவைத் தலைவராக 10 நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். நவ. 30-ஆம் தேதி வத்திகான் நகரில் நடைபெறும் மதங்களுக்கு இடையிலான மாநாட்டில் பங்கேற்று பேசுகிறேன் என்றாா்.