மணிப்பூா்: 13 நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு
கனமழை முன்னெச்சரிக்கை: மரக்காணம், வானூரில் எம்.பி. ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், மரக்காணம், வானூா் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து விழுப்புரம் விசிக எம்.பி. துரை. ரவிக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழுந்து கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான கோட்டக்குப்பம், சின்னமுதலியாா் சாவடி உள்ளிட்ட இடங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மரக்காணம் மற்றும் வானூா் வட்டாட்சியரகங்களில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் மற்றும் இதர அலுவலா்களுடன் துரை.ரவிக்குமாா் ஆய்வு மேற்கொண்டு, விவரங்களைக் கேட்டறிந்தாா். பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களைத் தயாா் நிலையில் வைத்திருக்குமாறு அலுவலா்களை அவா் கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின்போது விசிக மாவட்டச் செயலா்கள் மலைச்சாமி, பொன்னிவளவன், கட்சி நிா்வாகிகள் நாகராஜ், புஷ்பகாந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.