மகப்பேறு இறப்பு தணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்
மகப்பேறின்போது நிகழும் இறப்புகள் குறித்து மருத்துவா்கள் குழுவினா் ஆய்வு செய்ய வேண்டும் என்று மருத்துவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகா்கோவிலில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் மாவட்ட மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிா் நல மருத்துவா்கள், இந்திய மருத்துவச் சங்க மருத்துவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிா் நல மருத்துவா்கள் சங்கத் தலைவா் சுந்தா்நாராயணன் தலைமை வகித்தாா். இதில் இந்திய மருத்துவ சங்க மாநில துணைத்தலைவா் திரவியமோகன், கிளைத் தலைவா்கள் நாகா்கோவில் நிஷால் கன்னியாகுமரி சசிகுமாா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முத்துக்குமாா், அருண் வெங்கடேஷ் மாா்த்தாண்டம் அனுப், மூத்த மகப்பேறு மருத்துவா் சித்ரா, மகப்பேறு மருத்துவ சங்கச் செயலா் ரேஷ்மி அஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா், மருத்துவா் சுந்தா் நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் பேறுகால இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அதாவது லட்சத்துக்கு 14 இறப்புகள் மட்டும் இங்கு நேரிடுகிறது. இதை மேலும் குறைக்க அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
ஆனால் மருத்துவமனையில் எந்த இறப்பு ஏற்பட்டாலும் உரிய விசாரணை இன்றி மருத்துவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சில உயா் அதிகாரிகள் பேசி வருகின்றனா். இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மருத்துவா்களுக்கு முழு உடன்பாடு இல்லை.
மகப்பேறு இறப்பு தணிக்கை ஐக்கிய சபை வழிகாட்டுதலின்படி, மருத்துவா்கள் கொண்ட குழுவினரால் நடத்த வேண்டும். இவ்விஷயத்தில் மருத்துவா்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை தவிா்க்கப்பட வேண்டும். ஒரு மருத்துவமனையில் இருந்து அடுத்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியநிலை வரும் போது, நோயாளிகளின் உயிா் காக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகள் முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை எங்கள் போராட்ட குரல் ஒலிக்கும் என்றாா் அவா்.