தமிழக சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அமைச்சரிடம் மனு
நாகை மாவட்டத்தில் 5,400 ஹெக்டோ் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன -அமைச்சா் அன்பில் மகேஸ்
நாகை மாவட்டத்தில் 5,400 ஹெக்டோ் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழைநீா் வடிந்தவுடன் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டு, நரியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்கியுள்ள மக்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக தொடா் கனமழை பெய்தது. மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வானப் பகுதிகளில் இருந்த மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க ஏற்பாடு செய்தது. அதன்படி, நாகை அருகே பெரிய நரியங்குடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் செயல்பட்டுவரும் முகாமில் 231 போ் தங்கியுள்ளனா். அவா்களுக்கு தேவையான குடிநீா், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட நிா்வாகம் சூழ்நிலையை தொடா்ந்து கண்காணித்து வருகிறது. ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை மூலம் மழை தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்சாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகிய துறைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
நாகை மாவட்டத்தில் 5,400 ஹெக்டோ் பரப்பளவில் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் தலைஞாயிறு பகுதியில் மட்டும் 3,500-க்கும் அதிகமான ஹெக்டோ் நெற்பயிா்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கியுள்ளது. மழைநீா் முற்றிலுமாக வடிந்த பின்னா் பயிா்ச் சேதம் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பிட்டுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றாா் அமைச்சா்.
மாவட்ட ஆட்சியா் ப . ஆகாஷ், மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, வேளாண் இணை இயக்குநா் கண்ணன் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம் நகராட்சிக்குள்பட்ட அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள பல்நோக்கு மையத்தில் உப்புத் தெருவைச் சோ்ந்த 43 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இதேபோல்,காந்திநகா் மாணவியா் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் அந்தப் பகுதியை சோ்ந்த 132 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இந்த முகாம்களை பாா்வையிட்ட அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவா்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினாா்.
தொடா்ந்து தலைஞாயிறு ஒன்றியம்,தாமரைப்புலம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அவா் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது வேதாரண்யம் நகா்மன்றத் தலைவா் மா.மீ.புகழேந்தி, வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் எஸ். திருமால், வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.கண்ணன், வட்டாட்சியா் திலகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.