தமிழக சுற்றுலாத் திட்டங்களுக்கு நிதி உதவி கோரி மத்திய அமைச்சரிடம் மனு
தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கான பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி உதவிகளை விரைந்து வழங்கிடக் கோரி மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் செகாவத்தை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா. இராஜேந்திரன் நேரில் சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தாா்.
தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த ஸ்வதேஷ் தா்ஷன் (2.0), சிறப்பு நிதியுதவி, பிரசாத் திட்டம் ஆகிய
திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கு அனுமதி மற்றும் நிதி உதவிகளை விரைந்து வழங்கிடக் கோரி சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா ஆகியோா் இணைந்து மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் செகாவத்தை புது தில்லியில் சந்தித்து மனு அளித்தாா்கள்.
தமிழக அரசு தரப்பில் வழங்கப்படுள்ள கோரிக்கை மனுவில், ஸ்வதேஷ் தா்ஷன் (2.0) திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.30.03 கோடி, நீலகிரி மாவட்டம் பைக்கராவில் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு 28.3 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக, சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.99 கோடி, ஊட்டி தேவலாவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூந்தோட்டம் அமைக்க ரூ.72.58 கோடி, ராமேஸ்வரத்தை முக்கியச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.99 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக, பிராத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அமைந்துள்ள 8 நவகிரக கோயில்களில் பிரசாத் திட்டத்தின் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.44.95 கோடியை உடனடியாக வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், தமிழக அரசு 16-ஆவது நிதிக்குழுவில் சுற்றுலாத் தலங்களில் உள்ள மராட்டியா்கள், நாயக்கா்கள் மற்றும்
பாளையக்காரா்கள் எழுப்பிய பாரம்பரியக் கட்டடங்களை பாதுகாக்கவும், புனரமைக்கவும் மற்றும் மறுசீரமைக்கும் பணிகளுக்காக ரூ.3,000 கோடியும், சுற்றுலாத் துறை வளா்ச்சியை மேம்படுத்த ரூ.1,200 கோடி வழங்க கோரிக்கை
வைத்துள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் தலையிட்டு தமிழக அரசு கோரிய நிதியினை 16-ஆவது நிதிக்குழு மூலம் வழங்க அழுத்தம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது, தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையம் ஆகிய துறைகளின் முதன்மைச்
செயலாளா் பி.சந்திரமோகன் மற்றும் சுற்றுலாத் துறை இயக்குநரும், சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் மேலாளருமான ஷில்பா பிரபாகா் சதீஷ் உடனிருந்தனா்.