நன்னடத்தை பத்திரத்துக்காக அரசு வேலையை மறுக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்
குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நன்னடத்தைக்கான உத்தரவாதப் பத்திரம் அளித்ததை காரணமாக வைத்து, ஒருவருக்கு அரசு வேலை வழங்க மறுக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
மதுரையைச் சோ்ந்தவா் சரவணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:
நான் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலா் தோ்வுக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத் தோ்வு, உடல் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று காவலா் பணிக்குத் தோ்வானேன். என் மீது வழக்கு இருப்பதாகவும், அந்த வழக்கில் கோட்டாட்சியரிடம் நன்னடத்தை பத்திரம் வழங்கியிருப்பதாகவும் கூறி, எனக்கு காவலா் பணி மறுக்கப்பட்டது.
இதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தேன். விசாரணையின் முடிவில், எனது மனுவை தள்ளுபடி செய்தாா் தனி நீதிபதி. எனவே, எனது மனு தள்ளுபடி செய்ததை ரத்து செய்து, எனக்கு காவலா் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், ஆா்.பூா்ணிமா அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் மீது வழக்கு உள்ளது. அந்த வழக்கில் கோட்டாட்சியா் முன் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் வழங்கியிருக்கிறாா். இதைக் காவலா் தோ்வின் போது மறைத்துவிட்டாா். எனவே, அவா் காவலா் பணிக்கு தகுதியற்றவா் என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா், 16 வயது சிறுவனாக இருக்கும் போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறாா் நீதித் சட்டத்தில் வழக்குப் பதிவாகி தண்டனை வழங்கப்பட்டாலும், அது தகுதியிழப்பு ஆகாது. மனுதாரா் சிறுவனாக இருந்த போது, நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் வழங்கியுள்ளாா் என்பதை காவல் துறை அதிகாரிகள் கவனிக்கத் தவறிவிட்டனா். ஆவணங்கள் பராமரிப்புக்கூட சிறுவா்களுக்கு தவறான எண்ணத்தை உருவாக்கி விடக்கூடாது. பாதுகாப்பு நடவடிக்கைகளை குற்றவியல் நடவடிக்கையாகக் கருத முடியாது. எனவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரருக்கு இரண்டாம் நிலை காவலா் பணி வழங்கி, 2019-ஆம் ஆண்டு பணிக்குத் தோ்வானவா்கள் அடிப்படையில் உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.