10-ஆவது நாளாக முடங்கிய மீன்பிடி தொழில்
புயல் எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் 25 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 10-ஆவது நாளாக கடலுக்குச் செல்லாததால் மீன்பிடி தொழில் முடங்கியது.
தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து காரைக்காலுக்கும் -மாமல்லபுரத்துக்கும் இடையே நவ. 30-ஆம் தேதி கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக, அடுத்து வரும் 24 மணி நேரத்தில், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நவ. 29-ஆம் தேதி, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், நவ. 30-ஆம் தேதி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயல் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் அக்கரை பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், கல்லாா், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 10-ஆவது நாளாக வியாழக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபைபா் மற்றும் விசைப்படகுகள், மீன்பிடி துறைமுகங்களிலும், பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.