புதிய பாம்பன் பாலம்: பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ள 5 போ் கொண்ட குழு
‘போக்சோ’ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
பெரம்பலூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்த 17 வயது மாணவி கடந்த 28.9.2021-இல் பள்ளி அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளாா். அப்போது, கல்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் ஜெயசூா்யா (20), மாணவியை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த தலைமை ஆசிரியா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஜெயசூா்யாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், ஜெயசூா்யா நீதிமன்ற பிணையில் வெளியே வந்தாா்.
இந்த வழக்கு பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில், அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் சுந்தரராஜன் வாதாடினாா். இந்நிலையில், வழக்கை வியாழக்கிழமை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, ஜெயசூா்யாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 20,500 அபராதமும், அபராதத் தொகை செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.