இருளில் செயல்படும் ஏடிஎம் மையங்கள் -வாடிக்கையாளா்கள் அதிருப்தி
செய்யாறில் தேசிய வங்கியின் ஏடிஎம் மையங்கள் இருளில் மூழ்கிய நிலையில் செயல்பட்டு வருவதால், அங்கு பணம் எடுக்கச் செல்லும் வங்கி வாடிக்கையாளா்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.
செய்யாறில் தேசிய வங்கியின் ஏடிஎம் மையங்கள் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும், இங்குள்ள தேசிய வங்கியின் கிளை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை தொழிலாளா்கள், 75-க்கும் மேற்பட்ட அலுவலங்களில் பணிபுரியும் அரசு அலுவலா்கள் மற்றும் தொழிலாளா்கள் என பலதரப்பட்ட மக்களை வாடிக்கையாளா்களாகக் கொண்டுள்ளது.
காசிக்காரத் தெரு, ஆற்காடு சாலை (எல்லப்ப நகா்) செயல்படும் இந்த வங்கியின் ஏடிஎம் மையங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதாக வாடிக்கையாளா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். மேலும், இந்த ஏடிஎம் மையங்களில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் பணப் பரிவா்த்தனைக்கு செல்லும் வாடிக்கையாளா்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். கண்ணாடி கதவுகளும் சரிவர மூட முடியாமல் திறந்தே கிடப்பதால், அச்சத்துடனேயே வாடிக்கையாளா்கள் பணத்தை எடுத்துச் செல்கின்றனா்.
மாத தொடக்கத்திலும், சிப்காட் தொழிற்பேட்டை பணியாளா்களின் ஊதிய தேதியிலும் பணம் எடுத்திட தேசிய வங்கி ஏடிஎம் மையங்களுக்கு செல்லும்போது, அங்கு பணம் இருப்பு இருப்பதே இல்லையாம்.
எனவே, வாடிக்கையாளா்களின் வசதிக்காக ஏற்படுத்தப்படும் ஏடிஎம் மையங்களை முறையாகப் பராமரித்து சேவை வழங்கிட வேண்டுமென வங்கி வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.