`மேக் இன் இந்தியா திட்டத்தால் ராணுவ தளவாட ஏற்றுமதி 30 சதவிகிதம் உயர்வு!'- முர்மு ஊட்டியில் புகழாரம்!
நான்கு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகைத் தந்திருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கியிருக்கிறார். குன்னூர், வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புத்துறையின் முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
உலகின் பல்வேறு நாடுகளின் ராணுவ பயிற்சி அதிகாரிகள் முன்னிலையில் உரை நிகழ்த்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, " நாட்டிலேயே முதன்மையான இந்த பயிற்சி கல்லூரியில் 26 நாடுகளை சேர்ந்த 38 அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர்.
இந்த கல்லூரியில் பயிற்சி பெற தேர்ச்சி பெற்ற அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
அந்த அதிகாரிகளின் அனுபவத்தை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும், பெண் அதிகாரிகளும் பயிற்சி பெறுவது இன்றியமையாதது. இனி வரும் காலங்களில் அதிகளவில் பெண்கள் இது போன்ற பாதுகாப்பு படை பயிற்சிகளில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்கிறேன்.
இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கின்றனர். இந்திய எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில் தனித்துவத்துடன், சுய சார்புடன் முன்னேறி வருகிறது.
நமது பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, தளவாடங்களை ஏற்றுமதி செய்ய நம்பகத்தன்மையுடன் செயலாற்றி வருகிறது.
பாதுகாப்புத்துறையில் நமது பாதுகாப்பு நிறுவனங்களாக ஹெச்.ஏ.எல், டி.ஆர்.டி.ஓ தடம் பதித்து வருகின்றன. தற்போது ராணுவ தளவாடங்கள் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு மேக் இன் இந்தியா திட்டமே காரணம்.
வேகமாக மாறி வரும் புவியமைப்பு மாற்றத்தால் நமது புதிய சவால்களை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்.
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றுமின்றி, சைபர் குற்றங்கள் மற்றும் தீவிரவாதத்தை சமாளிக்க வேண்டி நிலையுள்ளது.
அத்துடன் காலநிலை மாற்றத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.
அதற்கான ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் நவீன தொழில்நுட்பகளை உருவாக்க வேண்டும்" என்றார்.