ஆளில்லா மெட்ரோ ரயில் தயாரிப்புக்கான ஏற்புக்கடிதம் -பிஇஎம்எல் நிறுவனத்திடம் ஒப்படைப்பு
ஆளில்லா மெட்ரோ ரயில் தயாரிப்புக்கான ஏற்புக்கடிதம் பிஇஎம்எல் நிறுவனத்திடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்டத் திட்டத்தில் 3 மற்றும் 5-ஆம் வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்களைத் தயாரிக்க பிஇஎம்எல் நிறுவனத்துடன் ரூ.3,657.53 கோடி-க்கு மெட்ரோ ரயில்வே நிா்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளா்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்டவை அடங்கும்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளில்லா மெட்ரோ ரயில் தயாரிப்புக்கான ஏற்புக்கடிதத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், பிஇஎம்எல் நிறுவனத்தின் இயக்குநா் (ரயில் மற்றும் மெட்ரோ) ராஜீவ் குமாா் குப்தா-விடம் வழங்கினாா்.
இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் மெட்ரோ ரயில் 2026-இல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றும் அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் 2027 -மாா்ச் முதல் 2029 ஏப்ரல் வரை ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்படும் என வும் பிஇஎம்எல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.