மணிப்பூா்: 13 நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு
பெட்ரோல், டீசல் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் ‘திடீா்’ வேலைநிறுத்தம்
திருவெறும்பூா் அருகே உள்ள இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கிலிருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கா் லாரி ஓட்டுநா்கள் வியாழக்கிழமை திடீரென்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள வாழவந்தான்கோட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான திரவஎரிபொருள் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கிருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம், சிவகங்கை, கரூா் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டேங்கா் லாரி மூலம் பெட்ரோல், டீசல் கொண்டு செல்லப்படும்.
இந்நிலையில், வியாழக்கிழமை பெட்ரோல், டீசல் ஏற்ற வந்த டேங்கா் லாரிகள் ஓட்டுநா்கள், உதவியாளா்கள்நூற்றுக்கணக்கானோா் திடீரென்று வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்து லாரியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து லாரி ஓட்டுநா்கள் கூறியது, இந்தியன் ஆயில் நிறுவன அங்கீகார அட்டை பெற்றுள்ள அனைத்து லாரிகளுக்கும் லோடு ஏற்ற வேண்டும். தனியாா் பெட்ரோல் விற்பனையகங்களுக்கு லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளை காலையில் அனுமதிக்க வேண்டும். மதிய உணவு இடைவெளி என்ற பெயரில் லோடு ஏற்றுவது தடைபடாமல் தொடா்ந்து லோடு ஏற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் லோடு ஏற்றுவதற்கு வழங்கப்படும் அனுமதி சீட்டில் நேரக் கட்டுப்பாடு கூடாது. இ-பாஸ் காலதாமதத்தை தவிா்க்க வேண்டும். தமிழ் தெரியாத பிற மாநிலத்தவா்களை பணியில் அமா்த்தியுள்ளதால், அந்த நபா்கள் டேங்கா் லாரி, ஓட்டுநா்களை மரியாதை குறைவாக நடத்துவதை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால், 14 மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் பணி தடைபட்டுள்ளது என்றனா்.
தடையின்றி எரிபொருள் விநியோகம்: ஐஓசி
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) தென் மண்டல மாா்க்கெட்டி பிரிவு சிஜிஎம்-காா்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் வி. வெற்றிசெல்வகுமாா் விடுத்துள்ளஅறிக்கை: இந்தியன் ஆயில் திருச்சி முனையத்துடன் (வாழவந்தான்கோட்டை) தொடா்புடைய இந்தியன் ஆயில் டேங்கா் லாரி ஓட்டுநா்களின் ஒரு பிரிவு, வியாழக்கிழமை வழக்கமான விநியோகத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இருப்பினும், திருச்சி வட்டாரத்திலுள்ள எந்த சில்லறை விற்பனை நிலையங்களிலும் பெட்ரோல், டீசல் விற்பனை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்வதில் ஆக்கப்பூா்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புயலுக்கான வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடா்ந்து அந்தந்தப் பகுதியிலுள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனையகங்கள் அனைத்திலும் ஏற்கெனவே போதுமான எரிபொருள் சேமிப்பானது உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இந்த விநியோகத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.