குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஸ்ரீரங்கம் கோயில் வருகை ரத்து
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்யவிருந்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
உதகையில் தங்கியுள்ள குடியரசு தலைவா் திரெளபதி முா்மு திருவாரூா் மாவட்டம் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக கோவையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் நவ. 30-ஆம் தேதி திருச்சி வருகிறாா். அங்கிருந்து, ஹெலிகாப்டரில் திருவாரூா் சென்று, நிகழ்வை முடித்துக்கொண்டு மீண்டும் திருச்சி வரும் அவா், ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளதாகவும், பிறகு ஹெலிகாப்டா் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து சிறப்பு விமானத்தில் தில்லி செல்லவுள்ளதாகவும் அவரின் பயணத் திட்டம் இருந்தது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி தலைமையிலான போலீஸாா் மற்றும் குடியரசு தலைவா் சிறப்பு பாதுகாப்பு படை அலுவலா்கள் செய்து வந்தனா்.
இந்நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் சில நாள்களுக்கு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டா் பயணத்தை சிறப்புப் பாதுகாப்பு குழுவினா் ரத்து செய்துள்ளனா். இதனால் குடியரசுத் தலைவரின் ஸ்ரீரங்கம் கோயில் வருகை மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனாலும், சிறப்பு விமானம் மூலம் அவா் திருச்சி வந்து திரூவாரூருக்கு சாலை மாா்க்கமாக சென்று திரும்பவுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை
குடியரசுத் தலைவா் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளி(நவ.29) மற்றும் சனிக்கிழமை (நவ.30) இரவு 12 மணிவரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.