``தொடர் மழை, சீற்றத்துடன் காணப்படும் கடல்'' - நாகப்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கன மழை, அதி கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, செருதூர், வேளாங்கண்ணி வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் நாகை மீன்பிடித் துறைமுகம் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. புயல் வீசினால் படகுகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க ஒரு விசை படகுடன் மற்றொரு விசைப்படகை இணைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். கடல் சீற்றம் காரணமாக கடந்த சில தினங்களாகவே மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
நாகையில் தொடர் மழை காரணமாக பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய 125 ஜேசிபி இயந்திரங்கள், 250 ஜெனரேட்டர், 251 மரம் அறுக்கும் இயந்திரம், 590 மோட்டார் பொருத்தப்பட்ட படகுகள், 2,524 மோட்டார் பொருத்தப்படாத படகுகள், 117 நாட்டு படகுகள், 26,268 மணல் மூட்டைகள், 66,250 சாக்கு பைகள் 4267 சவுக்கு கம்பங்கள், 5,000கிலோ பிளீச்சிங் பவுடர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 4,000 மின்கம்பங்கள், 75 கிலோ மீட்டர் மின் கம்பிகள், 200 மின்மாற்றிகள் மின்வாரியத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரத் துறை சார்பாக 108 ஆன்புலன்ஸ் 8, ஆரம்ப சுகாதார மையத்தில் 189 படுக்கைகள், 11 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் தாழ்வான பகுதிகளாக கருதப்படும் 68 இடங்களில் அத்தியாவசிய பொருள்கள் அங்காடிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சரக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் பணி செய்யும் கிராமத்திலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 25 கடற்கரையோர கிராமங்களில் புயல் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். முக்கிய சுற்றிலாத்தளமான வேளாங்கண்ணி மழை காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. வேளாங்கண்ணி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் நீண்ட நேரமாக கடலில் குளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீஸார் கடலில் குளித்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...